Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 11, 2023 – வ2

திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 11, 2023 – வ2

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

புனித முதலாம் தமசுஸ் – திருத்தந்தை

நினைவுக்காப்பு
மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை)

முதல் வாசகம்

தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-18a, 28-32, 36

அந்நாள்களில்

பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது:

தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தி உள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக் கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.

எனவே விழிப்பாய் இருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்திவந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது.

இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

1ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார்.2வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! – பல்லவி

3நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். – பல்லவி

4‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர்-2023 ஜன ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.