Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2023

திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2023

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, “அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.

“யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.

ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.

பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 145: 1,9. 10-11. 12-13a (பல்லவி: 8)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். – பல்லவி

12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.13aஉமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 45: 8

அல்லேலூயா, அல்லேலூயா! வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர்-2023 ஜன ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.