திருவருகைக்காலம் முதல் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6
நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.
ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a)
பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எசா 55: 6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.