முத்தி. மரிய தெரேசா சிராமெல் – கன்னியர்
முதல் வாசகம்
உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டுச் செல்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4a
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.
உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10,11 காண்க)
பல்லவி: கருத்தாய்க் கேளாய் மகளே! மன்னர் உன் எழிலில் நாட்டம் கொள்வார்.
இரண்டாம் வாசகம்
இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-21
சகோதரர் சகோதரிகளே,
திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.
இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக் கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 12: 26
அல்லேலூயா, அல்லேலூயா! எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-26
அக்காலத்தில்
வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.