பொதுக்காலம் 29ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 20-25
சகோதரர் சகோதரிகளே,
கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஆபிரகாம் ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார். தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். ஆகவே “அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.”
“நீதியாகக் கருதினார்” என்று எழுதியுள்ளது அவரை மட்டும் குறிக்கவில்லை; நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம். நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)
பல்லவி: தம் மக்களைத் தேடி வந்த இஸ்ரயேலின் ஆண்டவரைப் போற்றுவோம்.
71நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.72-73அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். – பல்லவி
74-75இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21
அக்காலத்தில்
கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
ஆண்டவரின் அருள்வாக்கு.