பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8
சகோதரர் சகோதரிகளே,
இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? “ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.”
வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்:
“எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7 காண்க)
பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.
5‘என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். – பல்லவி
11நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 33: 22
அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7
அக்காலத்தில்
ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.