பொதுக்காலம் 9ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
நீரே என்னைத் தண்டித்தீர், நீரே என்னை மீட்டீர்; இதோ! நான் என் மகனைக் காணப்பெற்றேன்.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 11: 5-17
அந்நாள்களில்
அன்னா தம் மகன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம், “உம் மகன் வருகிறான்; அவனுடன் சென்றவரும் வருகிறார்” என்றார்.
தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம், “உன் தந்தை பார்வை பெறுவது உறுதி. அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும். அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள் சுருங்கி உரிந்து விழச் செய்யும். உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார்” என்றார். அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம்” என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார். தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, “கலங்காதீர்கள், அப்பா” என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு, தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார். தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, “என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்” என்றார். “கடவுள் போற்றி. அவரது மாபெரும் பெயர் போற்றி! அவருடைய தூய வானதூதர் அனைவரும் போற்றி! அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக! எல்லா வானதூதரும் என்றென்றும் போற்றி! கடவுள் என்னைத் தண்டித்தார். இப்போதோ என் மகன் தோபியாவை நான் காண்கிறேன்” என்று கடவுளைப் போற்றினார். தோபியா அக்களிப்புடன் கடவுளை வாயாரப் புகழ்ந்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்; தம் பயணத்தை வெற்றியாக முடித்துவிட்டதாகவும், பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இரகுவேலின் மகள் சாராவை மணம் புரிந்துகொண்டதாகவும், அவள் நினிவேயின் வாயில் அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தம் தந்தையிடம் கூறினார்.
தோபித்து அக்களிப்புடன் ஆண்டவரைப் புகழ்ந்துகொண்டே தம் மருமகளைச் சந்திக்க நினிவேயின் வாயிலுக்குச் சென்றார். நினிவே மக்கள் அவர் செல்வதையும், யாருடைய உதவியுமின்றித் திடமாக நடப்பதையும் கண்டு வியந்தார்கள். தம் கண்களைத் திறந்ததன் வழியாகக் கடவுள் தம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்று தோபித்து அவர்கள் முன் அறிக்கையிட்டார். தம் மகன் தோபியாவின் மனைவி சாராவைச் சந்தித்து வாழ்த்தினார். “மருமகளே, உன்னை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உன் கடவுள் போற்றி! மருமகளே, உன் தந்தை வாழ்க! என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள். உனக்கும் என் வாழ்த்துகள். மருமகளே, உன் வீட்டிற்குள் வா. நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக!” என்று வரவேற்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 146: 1-2. 6c-7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
அல்லது: அல்லேலூயா.
6cஎன்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். – பல்லவி
8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.9aஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். – பல்லவி
9bcஅனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.10சீயோனே! உன் கடவுள், என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மெசியா தாவீதின் மகன்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37
அக்காலத்தில்
இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, “மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.