Home » திருவெளிப்பாடு அதிகாரம் – 18 – திருவிவிலியம்

திருவெளிப்பாடு அதிகாரம் – 18 – திருவிவிலியம்

திருவெளிப்பாடு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

பாபிலோனின் வீழ்ச்சி

1இதன்பின் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது.

2அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார்:

“வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்!

அவள் பேய்களின் உறைவிடமாக,

அனைத்துத் தீய ஆவிகளின்

பதுங்கிடமாக,

தூய்மையற்ற பறவைகள்

அனைத்தின் புகலிடமாக,

தூய்மையற்ற வெறுக்கத்தக்க

விலங்குகளின் இருப்பிடமாக

மாறிவிட்டாள்.

3அவ்விலைமகளின்

காமவெறி என்னும் மதுவை

எல்லா நாட்டினரும் குடித்தனர்;

மண்ணுலக அரசர்கள் அவளோடு

பரத்தைமையில் ஈடுபட்டார்கள்;

உலகின் வணிகர்கள் அவளுடைய

வளங்களால் செல்வர்கள் ஆனார்கள்.

4பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன்; அது சொன்னது:

என் மக்களே,

அந்நகரைவிட்டு வெளியேறுங்கள்,

அவளுடைய பாவங்களில்

பங்கு கொள்ளாதிருக்கவும்

அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு

உட்படாதிருக்கவும்

வெளியே போய்விடுங்கள்.

5அவளின் பாவங்கள்

வானைத்தொடும் அளவுக்குக்

குவிந்துள்ளன;

கடவுள் அவளின் குற்றங்களை

நினைவில் கொண்டுள்ளார்.

6அவள் உங்களை நடத்தியவாறே

நீங்களும் அவளை நடத்துங்கள்;

அவளுடைய செயல்களுக்கு ஏற்ப

இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்;

அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த

மதுவுக்குப் பதிலாக

இரு மடங்கு கொடுங்கள்.

7அவள் தன்னையே பெருமைப்படுத்தி

இன்பம் துய்த்து வாழ்ந்ததற்கு ஏற்ப

அவள் வேதனையுற்றுத்

துயரடையச் செய்யுங்கள்.

ஏனெனில், ‘நான் அரசியாக

வீற்றிருக்கிறேன்;

நான் கைம்பெண் அல்ல;

நான் ஒருபோதும் துயருறேன்’ என்று

அவள் தன் உள்ளத்தில்

சொல்லிக்கொண்டாள்.

8இதன்பொருட்டுச் சாவு, துயரம், பஞ்சம்

ஆகிய வாதைகள் ஒரே நாளில்

அவள்மீது வந்து விழும்;

நெருப்பு அவளைச் சுட்டெரித்துவிடும்;

ஏனெனில், அவளுக்குத்

தீர்ப்பு வழங்கும் ஆண்டவராகிய கடவுள்

வலிமை வாய்ந்தவர்.”

பாபிலோன்மீது புலம்பல்

9அந்நகரோடு பரத்தைமையில் ஈடுபட்டு இன்பம் துய்த்து வாழ்ந்த மண்ணுலக அரசர்கள் அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்து அழுது மாரடித்துப் புலம்புவார்கள்.

10அவள் படும் வேதனையைக் கண்டு அஞ்சித் தொலையில் நின்று கொண்டு,

“ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே!

அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே

உனக்குக் கேடு வந்ததே!

ஒரே மணி நேரத்தில்

உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே.”

என்பார்கள்.

11மண்ணக வணிகர்களும் அவளை நினைத்து அழுது புலம்புவார்கள். ஏனெனில், அவர்களுடைய சரக்குகளை இனி வாங்குவார் எவரும் இலர்.

12பொன், வெள்ளி, விலையுயர்ந்த கல், முத்துகள், விலையுயர்ந்த மெல்லிய ஆடை, கருஞ்சிவப்பு ஆடை, பட்டாடை, செந்நிற ஆடை, பலவகை மணம் வீசும் மரக்கட்டைகள், தந்தத்தினாலான பலவகைப் பொருள்கள், விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு, சலவைக்கல் ஆகியவற்றாலான பொருள்கள்,

13இலவங்கம், நறுமணப் பொருள்கள், தூப வகைகள், நறுமணத் தைலம், சாம்பிராணி, திராட்சை மது, எண்ணெய், உயர்ரக மாவு, கோதுமை, ஆடுமாடுகள், குதிரைகள், தேர்கள், அடிமைகள் ஆகிய மனித உயிர்கள் ஆகியவற்றையெல்லாம் வாங்க எவரும் இலர்.

14“நீ விரும்பிய கனிகள்

உன்னைவிட்டு அகன்றுபோயின;

உன் மினுக்கு, பகட்டு எல்லாம்

ஒழிந்துபோயின;

இனி யாரும் அவற்றைக்

காணப் போவதில்லை”

என்பார்கள்.

15இச்சரக்குகளைக் கொண்டு அவளோடு வாணிகம் செய்து செல்வம் திரட்டியவர்கள் அவளது வேதனையைக் கண்டு அஞ்சி, தொலையிலேயே நின்ற வண்ணம் அழுது புலம்புவார்கள்.

16“ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!

விலையுயர்ந்த மெல்லிய ஆடையும்

செந்நிற கருஞ்சிவப்பு உடையும் அணிந்து,

பொன், விலையுயர்ந்த கல், முத்துகளால்

அணிசெய்து கொண்டவளே!

அந்தோ! உனக்குக் கேடு வந்ததே!

17இவ்வளவு செல்வமும்

ஒரே மணி நேரத்தில்

பாழாய்ப் போய்விட்டதே”

என்பார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணிகள், கப்பலோட்டிகள், கடல் வணிகர்கள் ஆகிய அனைவரும் தொலையிலேயே நின்றார்கள்.

18அவள் எரிந்தபோது எழுந்த புகையைப் பார்த்து “இம்மாநகருக்கு இணையான நகர் உண்டோ!” என்று கதறினார்கள்.

19அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு அழுது புலம்பினார்கள்:

“ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!

கடலில் கப்பலோட்டிய அனைவரையும்

தன் செல்வச் செழிப்பால்

செல்வராக்கிய நீ

ஒரே மணிநேரத்தில்

பாழடைந்து விட்டாயே!”

என்று கதறினார்கள்.

20“விண்ணகமே, இறைமக்களே,

திருத்தூதர்களே, இறைவாக்கினர்களே,

அவளைமுன்னிட்டு

மகிழ்ந்து கொண்டாடுங்கள்;

கடவுள் உங்கள் சார்பாக

அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு

வழங்கிவிட்டார்.

21பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்:

“பாபிலோன் மாநகரே,

நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்;

நீ இருந்த இடம் தெரியாமல்

அழிந்து விடுவாய்.

22யாழை மீட்டுவோர், பாடகர்,

குழல் ஊதுவோர்,

எக்காளம் முழக்குவோர்

ஆகியோர் எழுப்பும் இசை

இனி உன் நடுவே எழவே எழாது;

தொழில் செய்யும் கைவினைஞர்

அனைவரும் இனி உன் நடுவே

குடியிருக்கவே மாட்டார்கள்;

எந்திரக்கல் எழுப்பும் ஒலி

இனி உன் நடுவே எழவே எழாது.

23விளக்கின் ஒளி இனி உன்னகத்தே

ஒளிரவே ஒளிராது;

மணமக்களின் மங்கல ஒலி

இனி உன்னகத்தே எழவே எழாது;

ஏனெனில், உன் வணிகர்கள்

மண்ணுலகில் பெருங்குடி மக்களாய்

விளங்கினார்கள்;

உன் பில்லிசூனியம்

எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.

24இறைவாக்கினர்கள், இறைமக்களின்

இரத்தக்கறையும்,

ஏன், மண்ணுலகில் கொல்லப்பட்ட

அனைவருடைய இரத்தக்கறையுமே

அவளிடம் காணப்பட்டது.”


18:2 எசா 21:9; எரே 51:8; திவெ 14:8.
18:3 எசா 23:17; எரே 51:7.
18:4 எசா 48:20; எரே 50:8,45.
18:5 விப 18:20,21; எரே 51:9.
18:6 திபா 137:8; எரே 50:29.
18:7-8 எசா 47:7-9.
18:9-10 எசே 26:16,17.
18:11 எசே 27:31,36.
18:12-13 எசே 27:12,13,22.
18:15 எசே 27:31,36.
18:17 எசா 23:14; எசே 27:26-30.
18:18 எசே 27:32.
18:19 எசே 27:30-34.
18:20 இச 32:43; எரே 51:48.
18:21 எரே 51:63,64; எசே 26:21.
18:22 எசே 26:13; எசா 24:8.
18:22-23 எரே 7:34; 25:10.
18:24 எரே 31:49.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks