பொதுக்காலம் 25ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்.
இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9
தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது: “யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்: ‘இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது அல்லவா? ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடு இரு,’ என்கிறார் ஆண்டவர். ‘தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடு இரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.” “நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது; அஞ்சாதீர்கள்.
ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‘இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது’, என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியை விடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்’, என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 43: 1. 2. 3. 4 (பல்லவி: 5bc)
பல்லவி: கடவுளின் மீட்புச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துவேன்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22
அக்காலத்தில்
இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.
அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.