பொதுக்காலம் 22ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 21-23
சகோதரர் சகோதரிகளே,
முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 54: 1-2. 4,6 (பல்லவி: 4a)
பல்லவி: இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5
ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், “ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார். மேலும் அவர்களிடம், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.