பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46
அந்நாள்களில்
ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டுவரப்பட வேண்டும்.
அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, ‘தீட்டு, தீட்டு’, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7a)
பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
இரண்டாம் வாசகம்
நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்; நீங்கள் என்னைப்போல் நடங்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31- 11: 1
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.
நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.