Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜூன் 3, 2023 – வ2

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 3, 2023 – வ2

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

புனிதர்கள் சார்லஸ் லுவாங்கா, தோழர்கள் – மறைச்சாட்சியர்

நினைவு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்.

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14

அந்நாள்களில்

சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப் பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப் படுத்தப்பட்டார்கள்.

அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், “நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்” என்றார்.

தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், “நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே” என்று கூறினார்.

அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; “நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்” என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள்.

அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறுவாயில், “கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட்டாய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 1a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். – பல்லவி

4அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;5கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். – பல்லவி

7bகண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2023 ஜூலை ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.