1 மக்கபேயர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

1 மக்கபேயர் அதிகாரங்கள்

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 யூதா உரோமையர்களின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டார்; அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்; அவர்களுக்குச் சார்பாக இருப்போர் அனைவரிடமும் நல்லுறவு கொள்கிறார்கள்; அவர்களை நாடிச்செல்வோருக்கு அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்;

2 கால்லியர் நடுவே அவர்கள் போர்கள் புரிந்து, தீரச் செயல்கள் செய்தார்கள்; அவர்களை வென்று திறை செலுத்தச் செய்தார்கள்;

3 ஸ்பெயின் நாட்டில் இருந்த பொன், வெள்ளிச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்கள்;

4 தங்கள் திட்டத்தினாலும் விடாமுயற்சியினாலும் தங்களுக்கு மிகத் தொலையில் இருந்த இடங்கள் அனைத்தையும் வென்றார்கள்; நிலத்தின் கடையெல்லையினின்று தங்களை எதிர்த்து வந்த மன்னர்களை அடிபணியச் செய்து அழித்து, அவர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தினார்கள்; எஞ்சிய மன்னர்கள் ஆண்டுதோறும் அவர்களுக்குத் திறை செலுத்திவந்தார்கள்;

5 பிலிப்பையும் கித்திம் அரசனான பெர்சேயுவையும் தங்களுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்த மற்றவர்களையும் போரில் முறியடித்து அடிபணியச் செய்தார்கள்;

6 ஆசியாவின் அரசனான மாமன்னன் அந்தியோக்கு நூற்று இருபது யானைகளோடும் குதிரைகளோடும் தேர்களோடும் பெரும் படையோடும் அவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றபோது அவனையும் தோற்கடித்தார்கள்.

7 அவனை உயிரோடு பிடித்து, அவனும் அவனுக்குப்பிறகு ஆண்ட மன்னர்களும் தங்களுக்கு மிகுதியான திறை செலுத்தும்படியும், பிணைக் கைதிகளைக் கொடுக்கும்படியும்,

8 அவனுடைய மிகச்சிறந்த மாநிலங்களிலிருந்து இந்தியா, மேதியா, லீதியா ஆகியவற்றை ஒப்படைக்கும்படியும் ஆணை பிறப்பித்தார்கள்; இந்நாடுகளை அந்தியோக்கிமிடமிருந்து பெற்று யூமேன் மன்னனுக்குக் கொடுத்தார்கள்.

9 கிரேக்கர்கள் வந்து அவர்களை அழித்துவிடத் திட்டமிட்டிருந்தார்கள்.

10 அவர்கள் இதை அறிந்து படைத்தலைவர் ஒருவரைக் கிரேக்கர்களுக்கு எதிராய் அனுப்பி அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்; அவர்களுள் பலர் காயமற்று மடியவே, அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்திப் பொருள்களைக் கொள்ளையடித்தார்கள்; அவர்களது நாட்டின்மீது வெற்றி கொண்டு கோட்டைகளைத் தகர்த்தார்கள்; அவர்களை அந்நாள்வரை அடிமைகளாக வைத்திருந்தார்கள்.

11 தங்களை எதிர்த்து வந்த மற்ற நாடுகள், தீவுகள் அனைத்தையும் அழித்து அவற்றை அடிமைப்படுத்தினார்கள்; ஆனால் தங்களுடைய நண்பர்களோடும் தங்களை நம்பியிருந்தவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்கள்;

12 அருகிலும் தொலையிரும் இருந்த மன்னர்களைத் தங்களுக்கு அடிபணியச் செய்தார்கள்; அவர்களின் பெயரைக் கேட்ட யாவரும் அவர்களுக்கு அஞ்சினார்கள்;

13 எவருக்கு உதவி செய்து மன்னர்களாக்க விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரையும் மன்னர்கள் ஆக்குகிறார்கள்; எவரை அரியணையிலிருந்து அகற்ற விரும்புகிறார்களோ அவர்களை அனைவரையும் அகற்றுகிறார்கள்; இவ்வாறு மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.

14 இவ்வாறெல்லாம் இருந்தும், அவர்களுள் ஒருவரும் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ள முடி தரிக்கவுமில்லை, அரசவுடை அணிந்ததுமில்லை.

15 தங்களுக்கென்று ஓர் ஆட்சிமன்றத்தை அமைத்தார்கள். முந்நூற்று இருபது உறுப்பினர்கள் நாள்தோறும் கூடி மக்களைப்பற்றியும் அவர்களது நலனைப் பற்றியும் கலந்து ஆய்வுசெய்கிறார்கள்.

16 தங்கள்மீது ஆட்சிசெலுத்தவும் தங்கள் நாடு முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் ஆண்டுதோறும் ஒரு மனிதரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்; எல்லாரும் அந்த ஒருவருக்கே கீழ்ப்பபடிகிறார்கள். அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ இல்லை – இவையெல்லாம் யூதாவின் காதுக்கு எட்டின.

17 ஆதலால் அக்கோனின் பேரனும் யோவானின் மகனுமான யூப்பொலேமையும் எலயாசரின் மகன் யாசோனையும் யூதா தேர்ந்தெடுத்தார்; உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ள அவர்களை உரோமைக்கு அனுப்பிவைத்தார்.

18 கிரேக்கர்களின் அடிமைத்தனத்தினின்று யூதர்களை விடுவித்துக் கொள்ளவே அவர் இவ்வாறு செய்தார்; ஏனெனில் கிரேக்கப் பேரரசு இஸ்ரயேலை அடிமைப்படுத்தியிருந்ததை உரோமையர்கள் கண்டார்கள்.

19 அவர்கள் நிண்ட பயணத்திற்குப்பின் உரோமையை அடைந்தார்கள். ஆட்சி மன்றத்தில் நுழைந்து,

20 “மக்கபே எனப்படும் யூதாவும் அவருடைய சகோதரர்களும் யூத மக்களும் உங்களோடு ஒப்பந்தமும் சமாதானமும் செய்து கொள்வதற்கும், எங்களை உங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் நீங்கள் பதிவு செய்துகொள்வதற்கும் எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார்கள்” என்று சொன்னார்கள்.

21 அவர்கள் சொன்னது மன்றத்தாருக்கு ஏற்புடைதாய் இருந்தது.

22 சமாதானம், ஒப்பந்தம் ஆகியவற்றின் நினைவாக எருசலேமில் யூதர்களிடம் இருக்கும்படி அங்கு அவர்கள் வெண்கலத் தகடுகளில் எழுதி அனுப்பிவைத்த மடலின் நகல் பின்வருமாறு;

23 “உரோமையருக்கும் யூத இனத்தாருக்கும் நீரிலும் நிலத்திலும் என்றும் நலம் உண்டாகுக. வாளும் பகைவரும் அவர்களைவிட்டு அகலட்டும்.

24 உரோமையர்களுக்கு எதிராக அல்லது அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட நட்பு நாடுகளுக்கு எதிராக முதலில் போர் மூண்டால்,

25 யூத இனத்தார் சூழ்நிலைக்கு ஏற்ப முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

26 உரோமையில் முடிவுசெய்தபடி, எதிர்த்துப் போர்புரிவோருக்குத் தானியமோ படைக்கலங்களோ பணமோ கப்பல்களோ கொடுக்கக்கூடாது; எதையும் எதிர்பாராமலே அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

27 இவ்வாறே முதலில் யூத இனத்தாருக்கு எதிராகப் போர் மூண்டால், உரோமையர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

28 உரோமையில் முடிவுசெய்தபடி, அவர்களின் பகைவர்களுக்கு தானியமோ படைக்கலங்களோ பணமோ கப்பல்களோ கொடுக்கப்பட மாட்டாது. கள்ளமின்றி அவர்கள் இக்கடமையைச் செய்யவேண்டும்.

29 இத்தகைய நிபந்தனைகளோடு உரோமையர்கள் யூத மக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

30 இந்த நிபந்தனைகளில் எதையேனும் சேர்க்கவோ நீக்கவோ இரு தரப்பினரும் இனிமேல் முடிவு செய்தால், தங்கள் விருப்பப்படி அவ்வாறு செய்யலாம்; இவ்வாறு சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதும் சட்டப்படி செல்லும்.

31 மேலும் தெமேத்தரி மன்னர் யூத இனத்தாருக்கு இழைத்தவரும் கொடுமைகளைப்பற்றி நாங்கள் அவருக்கு எழுதியிருப்பது வருமாறு; ‘எங்கள் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூதர்கள்மீது நீர் ஏன் கடினமான நுகத்தைச் சுமத்தியிருக்கிறீர்?

32 அவர்கள் எங்களிடம் உமக்கு எதிராய் மீண்டும் முறையிடுவார்களாயின் அவர்களுக்கு நீதி வழங்க நாங்கள் நீரிலும் நிலத்திலும் உம்மை எதிர்த்துப் போரிடுவோம்.’ “

Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.