Home » Tamil » தொடக்கநூல் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

ஆகாரும் இஸ்மயேலும்

1ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.

2சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.

3ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.

4அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.

5அப்பொழுது சாராய் ஆபிராமிடம், “எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்” என்றார்.

6ஆபிராம் சாராயிடம், “உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்” என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.

7ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.

8அவர் அவளை நோக்கி, “சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்” என்றாள்.

9ஆண்டவரின் தூதர் அவளிடம், “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட” என்றார்.

10பின்பு, ஆண்டவரின் தூதர் அவளிடம், “உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்” என்றார்.

11மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.

12ஆனால், அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.

13அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.

14ஆகவே, அந்தக் கிணற்றிற்கு ‘பெயேர் லகாய்ரோயி’* என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருக்கின்றது.

15ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார்.

16ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.


16:15 கலா 4:22.

16:14 எபிரேயத்தில், ‘என்னைக் காண்கின்ற வாழ்பவரின் கிணறு’ என்பது பொருள்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.