எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
யூதர்கள் பெற்ற சலுகைகள்
1சதிகாரனாகிய ஆமானின் சொத்துகள் அனைத்தையும் அர்த்தக்சஸ்தா மன்னர் அன்றே எஸ்தருக்கு வழங்கினார். மொர்தெக்காய் தமக்கு உறவினர் என்று எஸ்தர் விளக்கியிருந்ததால், மன்னர் அவரைத் தம்மிடம் அழைத்தார்;
2ஆமானிடமிருந்து திரும்பப் பெற்றிருந்த கணையாழியை எடுத்து மொர்தெக்காயிடம் வழங்கினார். ஆமானுடைய சொத்துக்களுக்கெல்லாம் எஸ்தர் அவரைப் பொறுப்பாளர் ஆக்கினார்.
3மீண்டும் மன்னரிடம் உரையாடிய எஸ்தர் அவரது காலில் விழுந்து, ஆமான் யூதர்களுக்கு எதிராகச் செய்திருந்த சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடிக்குமாறு மன்றாடினார்.
4மன்னர் தம் பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டவே, எஸ்தர் எழுந்து மன்னருக்கு முன்னால் வந்து நின்றார்.
5அப்பொழுது எஸ்தர், “நீர் விரும்பி எனக்குப் பரிவு காட்டுவீராயின், உமது பேரரசில் வாழும் யூதர்களை அழிக்குமாறு ஆமான் விடுத்திருக்கும் மடல்களைத் திரும்பப் பெறுமாறு ஆணை பிறப்பிப்பீராக.
6என் மக்கள் படும் துன்பத்தை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும்? என் இனத்தார் அழிந்தபின் நான் எவ்வாறு உயிர்வாழ இயலும்?” என்றார்.
7அதற்கு மன்னர் எஸ்தரிடம், “ஆமானுக்கு உரிய சொத்து அனைத்தையும் நான் மனமுவந்து உனக்கு வழங்கியதோடு யூதர்களை அழிக்க முனைந்ததற்காக அவனைத் தூக்கிலிட்டுவிட்டேன். இன்னும் உனக்கு என்ன வேண்டும்?
8உங்களுக்கு விருப்பமானதை நீங்களே என் பெயரால் எழுதி, எனது கணையாழியால் முத்திரையிட்டுக் கொள்ளுங்கள்; மன்னரின் கட்டளையால் எழுதப்பட்டு அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்ட ஆணையை எவராலும் மாற்ற முடியாது” என்று கூறினார்.
9அதே ஆண்டின் முதல் மாதமாகிய நீசான் மாதம் இருபத்து மூன்றாம் நாள் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்தியா முதல் எத்தியோப்பியா வரை இருந்த நூற்று இருபத்தேழு மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பாளர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பப்பட்ட அரசாணை யூதர்களுக்கும் வரையப்பட்டது.
10மன்னரின் பெயரால் அவ்வாணை எழுதப்பட்டு, அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்டு, தூதர் வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.
11ஒவ்வொரு நகரிலும் இருந்த யூதர்கள் தங்கள் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், தங்களையே தற்காத்துக் கொள்ளவும், எதிரிகள், பகைவர்கள்மீது தங்கள் விருப்பப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த ஆணை அவர்களுக்கு உரிமை வழங்கியது.
12அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் ஒரே நாளில், அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் அவ்வாணை நடைமுறைக்கு வரவேண்டும் என்று விதிக்கப்பட்டது.
யூதர்களுக்குச் சலுகைகள் வழங்கும் அரசாணை
12aமன்னர் விடுத்த மடலின் நகல் பின்வருமாறு: 12b“இந்தியா முதல் எத்தியோப்பியா வரை உள்ள நூற்று இருபத்தேழு மாநில ஆளுநர்களுக்கும் அரசப்பற்றுடைய குடிமக்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது: 12cதங்கள் கொடையாளர்களின் தாராளமான வள்ளன்மையால் பெருமைப்படுத்தப்படும் பலர் செருக்குக் கொள்கிறார்கள்; நம் குடி மக்களுக்குத் தீங்கு விளைவிக்க முனைவது மட்டுமன்று, செல்வத்தால் இறுமாப்புக் கொண்டவர்களாய் அதை வழங்கிய கொடையாளர்களுக்கு எதிராகவே சூழ்ச்சி செய்யவும் துணிகிறார்கள். 12dமனிதரிடையே நன்றியுணர்வைக் கொன்றுவிடுவதோடு, நன்மைபற்றி ஒன்றுமே அறியாதோரின் தற்பெருமையால் உந்தப்பட்டு, எல்லாவற்றையும் எப்போதும் காண்பவரும் தீமையை வெறுப்பவருமான கடவுளின் தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்பிவிடலாம் என எண்ணுகிறார்கள். 12eபொறுப்பான பதவியில் நியமிக்கப்பெற்ற பலர் மாசற்றவர்களின் குருதியை அடிக்கடி சிந்துவதற்கு ஒருவகையில் காரணமாய் இருந்திருக்கிறார்கள்; மேலும், ஈடுசெய்ய இயலாப் பேரிடர்களுக்கும் பொறுப்பாய் இருந்திருக்கிறார்கள்; பொதுப்பணி நிர்வாகத்துக்குப் பொறுப்பு ஏற்றுள்ள நண்பர்களின் தூண்டுதலால் இவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள். 12fஇந்நண்பர்கள் தங்கள் தீய இயல்பின் வஞ்சனையால் ஆட்சியாளர்களின் நேர்மையான நல்லெண்ணத்தை வாய்ப்பாக பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுகிறார்கள். 12gதகுதியற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவோரின் அழிவுதரும் நடத்தையால் வஞ்சகமான முறையில் செய்யப்பட்டவை பற்றி நமக்குக் கிடைத்துள்ள மிகத் தொன்மையான ஆவணங்களிலிருந்து அறிவதை விட, அன்மைக் காலத்தில் நிகழ்ந்தவற்றை ஆராய்வதால் மிகுதியாக அறிந்து கொள்ள முடியும். 12hஎதிர்காலத்தில் நம் பேரரசில் எல்லா மனிதரும் குழப்பமின்றி அமைதியில் வாழ்ந்திட நாம் வழி வகுப்போம். 12iமாற்றங்களைப் புகுத்துவதாலும், நம் கவனத்துக்குக் கொண்டுவரப்படுவனபற்றி எப்போதும் நேர்மையாக முடிவுசெய்வதாலும் இதைச் செயல்படுத்துவோம்.
12k“இதற்கு அம்மதாத்தாவின் மகன் ஆமான் ஓர் எடுத்துக்காட்டு. மாசிடோனியனாகிய அவன் ஓர் அன்னியன்; பாரசீக இரத்தமே அவனிடம் இல்லை. எமக்குரிய இரக்கச் சிந்தை அவனிடம் சிறிதளவும் இல்லை; இருப்பினும் அவனை எம் விருந்தினனாக ஏற்றுக்கொண்டோம்.
12lஎல்லா நாட்டினர்மீதும் நாம் காட்டும் பரிவை அவன் எவ்வளவு துய்த்துவந்தாதெனில், எல்லா மக்களும் அவனை ‛எங்கள் தந்தை’ என்று அழைத்ததோடு, எப்போதும் மன்னருக்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கிவந்தார்கள். 12mஅவனோ அடக்கமுடியாத செருக்குக் காரணமாக எம் ஆட்சியையும் உயிரையும் பறிக்கச் சூழ்ச்சி செய்தான். 12nஎம் உயிரைக் காத்தவரும். எமக்கு எப்போதும் நன்மை புரிபவருமாகிய மொர்தெக்காயையும் குறையற்ற எம் துணைவியாராகிய எஸ்தர் அரசியையும் அவர்களின் இனத்தார் அனைவரோடும் சேர்ந்து அழிக்க நுணுக்கமான முறையில் வஞ்சமாக முயன்றான். 12oஇவ்வாறு எம்மை ஆதரவற்றவர் ஆக்கிவிட்டுப் பாரசீகரின் பேரரசை மாசிடோனியரிடம் ஒப்புவிக்க அவன் எண்ணினான். 12pஆனால் அரக்ககுணம் படைத்த இம்மனிதனால் அழிவுக்குக் கையளிக்கப்பட்ட யூதர்கள் தீயவர்கள் அல்லர் என நாம் காண்கிறோம். அவர்கள் நீதியான சட்டங்களைக் கடைப்பிடித்துவருபவர்கள்; 12qநம் மூதாதையர் காலந்தொட்டு இன்றுவரை நம் பேரரசை மிகச் சிறந்த முறையில் நெறிப்படுத்திவரும் உன்னதரும் ஆற்றல்மிக்கவரும் என்றுமுள்ளவருமான கடவுளின் மக்கள்.
12rஎனவே, அம்மதாத்தாவின் மகன் ஆமான் உங்களுக்கு அனுப்பியுள்ள மடல்களைப் புறக்கணித்து விடுங்கள்; ஏனெனில் இச்சூழ்ச்சிகளுக்குக் காரணமாய் இருந்த ஆமானும் அவன் வீட்டாரும் சூசா நகரின் வாயிலில் தூக்கிலிடப்பட்டுவிட்டார்கள். அனைத்தையும் ஆளும் கடவுள் அவனுக்குத் தகுந்த தண்டனையை மிக விரைவில் வழங்கிவிட்டார். 12sஇவ்வாணையின் நகல்களை எல்லாப் பொது இடங்களிலும் வைத்து, தங்கள் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்க யூதர்களை அனுமதியுங்கள். அதே நாளில், அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாளில், துன்ப நேரத்தில் தங்களைத் தாக்குவோரிடமிருந்து தற்காத்துக்கொள்ளும்படி அவர்களுக்கு எல்லா உதவியும் வழங்குங்கள். 12tஏனெனில் அனைத்தையும் ஆளும் கடவுள் தாம் தெரிந்தெடுத்துள்ள இனம் அழிவதற்குக் குறிக்கப்பட்ட நாளை மகிழ்ச்சியின் நாளாக மாற்றிவிட்டார்.
12uஎனவே உங்கள் திருவிழாக்களுள் முக்கியமான ஒன்றா இந்நாளைச் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுங்கள். இன்றும் இனியும் இந்நாள் நமக்கும் நம்மீது பற்றுக்கொண்ட பாரசீகருக்கும் மீட்பின் நினைவு நாளாகவும், நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தோருக்கு அழிவின் நினைவு நாளாகவும் இருக்கட்டும். 12xஇந்த ஆணையை ஏற்றுச் செயல்படாத எல்லா நகரும் நாடும் எம் சினத்துக்கு ஆளாகி, ஈட்டியாலும் நெருப்பாலும் அழிக்கப்படும்; அவை எக்காலத்துக்கும் மனித நடமாட்டம் அற்றவையாக மட்டுமல்ல, காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்குங்கூட வெறுப்புக்குரியவையாகவும் மாற்றப்படும்.
13பேரரசின் எல்லா இடங்களிலும் எல்லாரும் காணும்படி இவ்வாணையின் நகல்கள் வைக்கப்படட்டும். குறிப்பிட்ட நாளில் தங்கள் பகைவருக்கு எதிராகப் போராடுவதற்கு யூதர்கள் அனைவரும் முன்னேற்பாடாய் இருக்கட்டும்.”
14இதன்படி மன்னரின் ஆணையை நிறைவேற்றக் குதிரை வீரர்கள் விரைந்தார்கள். இவ்வாணை சூசா நகரிலும் வெளியிடப்பட்டது.
15அரச ஆடைகளையும் விலையுயர்ந்த மெல்லிய கருஞ்சிவப்புத் துணியாலான தலைப்பாகையையும் பொன்முடியையும் அணிந்தவராய் மொர்தெக்காய் அரண்மனையிலிருந்து வெளியே வந்தார். சூசா நகர மக்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
16யூதர்களுக்கு அது ஒளியின் நாள்! மகிழ்வின் நாள்!
17ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், எங்கெல்லாம் இது அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் வாழ்ந்த யூதர்கள் மகிழ்ந்து களிகூர்ந்தார்கள்; விருந்து நடத்தி விழா கொண்டாடினார்கள். யூதர்களுக்கு அஞ்சிய வேற்றினத்தார் பலர் விருத்தசேதனம் செய்துகொண்டு யூதராயினர்.