எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
அழிவைத் தவிர்க்க மொர்தெக்காய், எஸ்தரின் முயற்சி
1நிகழ்ந்தையெல்லாம் அறிந்த மொர்தெக்காய் தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு, சாக்கு உடை அணிந்து கொண்டு, தம்மேல் சாம்பலைத் தூவிக் கொண்டார்; “மாசற்ற ஓரினம் அழிக்கப்படுகிறது” என்று உரத்த குரலில் கூவிக்கொண்டே நகரின் தெருக்கள் வழியாக ஓடினார்.
2அவர் அரண்மனையின் வாயிலுக்கு வந்ததும் அங்கே நின்றுவிட்டார்; ஏனெனில் சாக்கு உடை அணிந்துகொண்டும் சாம்பலைத் தூவிக்கொண்டும் அரண்மனைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
3அரசாணை வெளியிடப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் யூதர்கள் பெரிதும் துயருற்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்; சாக்கு உடை அணிந்து சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்.
4அரசியின் பணிப்பெண்களும் அண்ணகர்களும் உள்ளே சென்று நடந்ததுபற்றி எஸ்தரிடம் கூறினார்கள். அதைக் கேள்வியுற்றதும் அவர் மிகவும் கலக்கமுற்றார்; சாக்கு உடைக்குப் பதிலாக அணிந்து கொள்ள மொர்தெக்காய்க்கு ஆடைகளை அனுப்பிவைத்தார். அவரோ அதற்கு இசையவில்லை.
5பின்னர் எஸ்தர் தமக்குப் பணிபுரிந்த அண்ணகரான அக்ரத்தையோனை அழைத்து, மொர்தெக்காயிடமிருந்து உண்மையை அறிந்து வருமாறு அனுப்பினார்.
6[*]
7நிகழ்ந்ததை மொர்தெக்காய் அந்த அண்ணகரிடம் தெரிவித்தார்; யூதர்களை அழிக்கும்பொருட்டு அரச கருவூலத்தில் நானூறு டன்* வெள்ளியைச் செலுத்துவதாக ஆமான் மன்னருக்கு அளித்திருந்த வாக்குறுதிபற்றிக் கூறினார்;
8யூதர்களை அழித்தொழிப்பது பற்றிச் சூசா நகரில் வெளியிடப்பட்ட ஆணையின் நகல் ஒன்றையும் எஸ்தரிடம் காட்டுமாறு அவரிடம் கொடுத்தார்; மன்னரிடம் எஸ்தர் சென்று அவருடைய ஆதரவை வேண்டி, தம் மக்களுக்காக அவரிடம் மன்றாட வேண்டும் என்று அவரிடம் தெரிவிக்குமாறு அந்த அண்ணகரைக் கேட்டுக் கொண்டார். “நீ என் ஆதரவில் ஓர் எளிய பெண்ணாக வளர்ந்துவந்த நாள்களை நினைத்துப்பார். மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆமான் நமக்கு எதிராகப் பேசி, நம் இனத்தைக் கொல்லுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டுள்ளான். எனவே ஆண்டவரிடம் மன்றாடு; பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு; நம்மைச் சாவினின்று காப்பாற்று” என்றும் அவரிடம் தெரிவிக்கச் சொன்னார்.
9அக்ரத்தையோன் திரும்பிவந்து எஸ்தரிடம் இவையனைத்தையும் தெரிவித்தார்.
10மொர்தெக்காயிடம் போய்க் கூறுமாறு எஸ்தர் அவரிடம்,
11“ஆண் பெண் யாராயினும், மன்னர் அழைக்காமல் உள்மண்டபத்துக்குள் சென்றால் அவர் உயிர்வாழ முடியாது என்பதைப் பேரரசின் எல்லா நாடுகளும் அறியும். மன்னர் யாரை நோக்கித் தம் பொற் செங்கோலை உயர்த்துகிறாரோ அவர் மட்டுமே உயிர்பிழைப்பார். நானோ மன்னரிடம் வருமாறு அழைக்கப்பட்டு இன்றோடு முப்பது நாள் ஆகிறது” என்றார்.
12எஸ்தர் சொன்னதை அக்ரத்தையோன் மொர்தெக்காயிடம் எடுத்துரைத்தார்.
13எஸ்தரிடம் சென்று தெரிவிக்குமாறு மொர்தெக்காய், “எஸ்தர், பேரரசில் உள்ள எல்லா யூதர்களுள்ளும் நீ மட்டும் பிழைத்துக் கொள்வாய் என எண்ணவேண்டாம்.
14இத்தகைய நேரத்தில் நீ வாளாவிருந்து விட்டாலும், யூதர்களுக்கு வேறு வழியாக உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்; ஆனால், நீயும் உன் தந்தையின் குடும்பத்தாரும் அழிவீர்கள். இத்தகைய ஒரு வாய்ப்புக்காகவே நீ அரசியாக்கப்பட்டாயோ என்னவோ, யார் அறிவார்!” என்று அக்ரத்தையோனிடம் கூறினார்.
15தம்மிடம் வந்தவரை மொர்தெக்காயிடம் எஸ்தர் அனுப்பி,
16“நீர் போய், சூசாவில் உள்ள யூதர்களை ஒன்றுகூட்டும். எல்லாரும் எனக்காக உண்ணா நோன்பிருங்கள். இரவு பகலாக மூன்று நாள்களுக்கு உண்ணவோ பருகவோ வேண்டாம். நானும் என் பணிப்பெண்களுங்கூட நோன்பிருப்போம். அதன்பின் சட்டத்துக்கு எதிராக நான் மன்னரிடம் செல்வேன். இதனால் நான் இறக்க வேண்டியிருந்தாலும் சரியே” என்றார்.
17பின் மொர்தெக்காய் அங்கிருந்து சென்று எஸ்தர் கேட்டுக்கொண்டவாறே செய்தார்.
மொர்தெக்காயின் மன்றாட்டு
17aமொர்தெக்காய் ஆண்டவரின் செயல்களையெல்லாம் நினைவு கூர்ந்து அவரிடம் பின்வருமாறு மன்றாடினார்:
17b“ஆண்டவரே, அனைத்தையும் ஆளும்
மன்னராகிய ஆண்டவரே,
அனைத்தும் உம்
அதிகாரத்தின் கீழ் உள்ளன.
நீர் இஸ்ரயேலைக் காக்கத்
திருவுளம் கொள்ளும்போது
எவராலும் உம்மை
எதிர்த்து நிற்கமுடியாது.
17cவிண்ணையும் மண்ணையும்
விண்ணின்கீழ் உள்ள
ஒவ்வொரு வியத்தகு பொருளையும்
படைத்தவர் நீரே.
நீரே அனைத்திற்கும் ஆண்டவர்.
ஆண்டவராகிய உம்மை
எதிர்ப்பவர் எவரும் இலர்.
17dஆண்டவரே, நீர்
அனைத்தையும் அறிவீர்.
தருக்குற்ற ஆமானுக்கு
நான் வணக்கம் செலுத்த
மறுத்ததற்குக் காரணம்
செருக்கோ இறுமாப்போ
வீண்பெருமையோ அல்ல
என்பதையும் நீர் அறிவிர்.
இஸ்ரயேலின் மீட்புக்காக
நான் அவனுடைய
உள்ளங்கால்களைக்கூட
முத்தமிட்டிருப்பேன்.
17eஆனால் கடவுளைவிட மனிதரை
மிகுதியாக மாட்சிமைப்படுத்தக்கூடாது
என்பதற்காகவே
இவ்வாறு நடந்து கொண்டேன்.
ஆண்டவரே, உம்மைத்தவிர
வேறு யாரையும்
நான் வணங்கமாட்டேன்.
நான் ஆமானை வணங்க மறுப்பது
செருக்கினாலன்று.
17fஆண்டவரே, கடவுளே, மன்னரே,
ஆபிரகாமின் கடவுளே,
இப்போது உம் மக்களைக்
காப்பாற்றும்.
எங்களுடைய பகைவர்கள்
எங்களை ஒழித்துவிடக்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்;
தொடக்கமுதல்
உம்முடையதாய் விளங்கும்
உரிமைச்சொத்தை அழித்துவிட
ஆவல் கொண்டுள்ளார்கள்.
17gஎகிப்து நாட்டிலிருந்து
நீர் உமக்காகவே மீட்டுவந்த
உம் உடைமையைப்
புறக்கணித்துவிடாதீர்.
17hஎன் மன்றாட்டைக் கேட்டருளும்;
உமது மரபுரிமைமீது
இரக்கங்கொள்ளும்.
ஆண்டவரே, நாங்கள் உயிர்வாழ்ந்து
உமது பெயரைப்
புகழ்ந்து பாடும் பொருட்டு,
எங்கள் அழுகையை
மகிழ்ச்சியாக மாற்றுவீர்;
உம்மைப் புகழ்ந்தேத்தும் வாயை
அடைத்துவிடாதீர்.”
17iஇஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் ஆற்றலெல்லாம் கூட்டிக் கத்தினார்கள்; ஏனெனில், தங்களது சாவு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
எஸ்தரின் மன்றாட்டு
17kசாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார்; பகட்டான தம் ஆடைகளைக் களைந்துவிட்டுத் துயரத்துக்கும் புலம்பலுக்கும் உரிய ஆடைகளை அணிந்து கொண்டார்; சிறந்த நறுமணப் பொருள்களுக்கு மாறாகத் தம் தலைமீது சாம்பலையும் சாணத்தையும் இட்டுக் கொண்டார்; தம் உடலை அலங்கோலப்படுத்திக் கொண்டு, தாம் வழக்கமாக ஒப்பனை செய்யும் உடலுறுப்புகளைத் தம் அவிழ்த்த கூந்தலால் மூடிக் கொண்டார். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார்:
17l“என் ஆண்டவரே,
நீர் மட்டுமே எங்கள் மன்னர்.
ஆதரவற்றவளும் உம்மைத்தவிர
வேறு துணையற்றவளுமாகிய
எனக்கு உதவி செய்யும்;
ஏனெனில், நான் என் உயிரைப்
பணயம் வைத்துள்ளேன்.
17mஆண்டவரே, நீர்
எல்லா இனங்களிலிருந்தும்
இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும்,
அவர்களின் மூதாதையர்
அனைவரிடையிலிருந்தும்
எங்கள் முன்னோரை என்றென்றைக்கும்
உம் உரிமைச்சொத்தாகத்
தெரிந்தெடுத்தீர் என்றும்,
நீர் அவர்களுக்கு
வாக்களித்ததையெல்லாம்
நிறைவேற்றினீர் என்றும்,
நான் பிறந்த நாள்தொட்டு
என் குலத்தாரும் குடும்பத்தாரும்
சொல்லக் கேட்டிருக்கிறேன்.
17nநாங்களோ உம் முன்னிலையில்
பாவம் செய்து விட்டோம்;
நீரும் எங்கள் பகைவர்களிடத்தில்
எங்களை ஒப்புவித்துவிட்டீர்.
ஏனெனில் நாங்கள்
அவர்களின் தெய்வங்களை
மாட்சிப்படுத்தினோம்.
ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர்.
17o-pநாங்கள் கொடிய
அடிமைத் தனத்தில் உழல்வதுகூட
அவர்களுக்கு மனநிறைவு தரவில்லை.
உமது வாக்குறுதியைச்
செயலற்றதாக்கவும்,
உமது உரிமைச் சொத்தை ஒழிக்கவும்,
உம்மைப் புகழ்ந்தேத்தும்
வாயை அடைக்கவும்,
உம் இல்லத்தின்
மாட்சியைக் குலைக்கவும்,
உமது பீடத்தில்
பலி நிகழாமல் தடுக்கவும்,
தகுதியற்ற தெய்வச் சிலைகளைப் புகழும்படி
வேற்றினத்தாரின் வாயைத் திறக்கவும்,
சாகக்கூடிய ஒரு மன்னரை
என்றென்றும் போற்றவும்,
அவர்கள் தங்கள் தெய்வங்களுடன்
ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
17qஆண்டவரே,
உயிரில்லாத தெய்வங்களிடம்
உமது அதிகாரத்தை
விட்டுக்கொடுக்கவேண்டாம்;
எங்கள் வீழ்ச்சியைக் கண்டு
பகைவர்கள் எள்ளி நகையாட
இடம் கொடுக்க வேண்டாம்.
அவர்களின் சூழ்ச்சியை
அவர்களுக்கு எதிராகவே திருப்பி,
அதைச் செய்தவனைப்
பிறருக்கு எச்சரிக்கையாக மாற்றும்.
17rஆண்டவரே, எங்களை நினைவுகூரும்;
எங்கள் துன்ப வேளையில்
உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும்;
தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே,
அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே,
எனக்குத் துணிவைத் தாரும்.
17sசிங்கத்துக்கு முன்
நாவன்மையுடன் பேசும் வரத்தை
எனக்கு வழங்கும்;
எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை
மன்னர் வெறுக்கச் செய்யும்;
இதனால் அவனும் அவனைச்
சேர்ந்தவர்களும் அழியச் செய்யும்.
17tஆண்டவரே, உமது கைவன்மையால்
எங்களைக் காப்பாற்றும்;
ஆதரவற்றவளும் உம்மைத்தவிர
வேறு துணையற்றவளுமாகிய
எனக்கு உதவி செய்யும்.
17uஅனைத்தையும் நீர் அறிவீர்;
தீயோரின் ஆடம்பரத்தை
நான் வெறுக்கின்றேன்;
விருத்தசேதனம் செய்துகொள்ளாதோர்,
அன்னியர்கள் ஆகிய
அனைவருடைய மஞ்சத்தையும்
அருவருக்கிறேன் என்பது
உமக்குத் தெரியும்.
17wஎன் இக்கட்டான நிலையை
நீர் அறிவிர்.
பொதுவில் தோன்றும்போது
தலைமீது அணிந்துகொள்ளும்
என் உயர்நிலையின் அடையாளத்தை
நான் அருவருக்கிறேன்;
தீட்டுத் துணிபோல் வெறுக்கிறேன்.
தனியாக இருக்கும்போது
நான் அதை அணிவதில்லை.
17xஆமானின் உணவறையில்
உம் அடியவளாகிய நான்
உணவருந்தியதில்லை;
அரச விருந்துகளை
நான் சிறப்பித்ததில்லை;
தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட
திராட்சை மதுவை
நான் அருந்தியதுமில்லை.
17yஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே,
உம் அடியவளாகிய நான்
இங்கு வந்த நாள் முதல் இன்றுவரை
உம்மிலன்றி வேறு எவரிடமும்
மகிழ்ச்சி கொண்டதில்லை.
17zஅனைத்தின் மேலும்
அதிகாரம் செலுத்தும் கடவுளே,
நம்பிக்கை இழந்த
எங்களது குரலுக்குச் செவிசாயும்.
தீயோரின் கைகளினின்று
எங்களைக் காப்பாற்றும்;
அச்சத்தினின்று என்னை விடுவியும்.”