மான்போர்ட் நகர் புனித லூயி மரிய கிரிஞ்ஞோ, மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனித பியர் சானல் – மறைப்பணியாளர், மறைச்சாட்சி (வி.நினைவு)
மான்போர்ட் நகர் புனித லூயி மரிய கிரிஞ்ஞோ, மறைப்பணியாளர்
முதல் வாசகம்
மடமை என்று கருதப்பட்ட நற்செய்தி வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-25
சகோதரர் சகோதரிகளே,
சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?
கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.
யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.
ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 40: 1,3ab. 6-7a,7b-8,9 (பல்லவி: 7a, 8a)
பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.7aஎனவே, ‘இதோ வருகின்றேன்.’ – பல்லவி
7bஎன்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். – பல்லவி
9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 4: 18-19
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.
நற்செய்தி வாசகம்
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20
அக்காலத்தில்
பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.
இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.