Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 27, 2026

திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 27, 2026

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பாஸ்கா 4ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18

அந்நாள்களில்

பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள். பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். ‘‘நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?” என்று குறை கூறினர்.

பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். ‘‘நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன். ‘பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு’ என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன். அதற்கு நான், ‘வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லையே’ என்றேன். இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, ‘தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே’ என்று அக்குரல் ஒலித்தது. இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர். தூய ஆவியார் என்னிடம், ‘தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்’ என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம். அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார். நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது. அப்போது, ‘யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்’ என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” என்றார்.

இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a)

பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

அல்லது: அல்லேலூயா.

42:1கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.2என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? – பல்லவி

43:3உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். – பல்லவி

4அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில்

இயேசு கூறியது: ‘‘நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றிஇழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை.

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார்.

ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப் படியே நான் இப்படிச் செய்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல்-2026 மே ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
4 11 18 25
Archive 2026 2027
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.