புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-25
குழந்தைகளே, இதுவே இறுதிக்காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக்காலம் இதுவேயென அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.
நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.
இயேசு ‘மெசியா’ அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள். மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வது இல்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள். அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 16
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-19
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின்மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.