Home » Tamil » எண்ணிக்கை அதிகாரம் – 4 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரம் – 4 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

கோகாத்து என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள்

1ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

2லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.

3சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.

4சந்திப்புக் கூடாரத்தில் கோகாத்துப் புதல்வரின் மிகப் புனிதமான பணி இதுவே;

5பாளையத்தினர் பறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கைப் பேழையை மூடுவர்.

6பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர்.

7திருமுன் அப்பத்து மேசையின் மேல் அவர்கள் ஒரு நீலத்துணியை விரிப்பர்; அதன் மேல் தட்டுகள், பூக்கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை வைப்பர்; அப்பம் அதன் மேல் எப்போதும் இருக்கும்;

8பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர்.

9பின்னர், அவர்கள் ஒரு நீலத்துணியை எடுத்து அதை விளக்குத்தண்டு, அதன் விளக்குகள், அதன் திரிகள், அதன் சாம்பல் தட்டுகள் ஆகியவற்றின் மேலும் எண்ணெய்க்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள் அனைத்தின் மேலும் விரிப்பர்.

10அவர்கள் அதனை அதன் துணைக்கலன்களோடு ஒரு வெள்ளாட்டுத் தோலால் மூடி அதனைச் சுமக்கும் சட்டத்தின் மேல் வைப்பர்.

11பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர்.

12தூயகப்பணியில் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்கள் எடுத்து, அவற்றை ஒரு நீலத் துணியில் வைத்து வெள்ளாட்டுத் தோலால் அவற்றை மூடிச் சுமக்கும் சட்டத்தின்மேல் வைப்பர்.

13அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதா துணியொன்றை விரிப்பர்.

14திருப்பணியில் பயன்படுத்தும் துணைக்கலன்களான தீச்சட்டிகள், முள்குறடுகள், சாம்பற் கரண்டிகள், கலங்கள் ஆகிய பலிபீடத்துத் துணைக்கலன்கள் அனைத்தையும் அவர்கள் அதன்மேல் வைப்பர்; வெள்ளாட்டுத்தோலை அதன் மேல் பரப்பி மூடி, அதன் நிலைக்கால்களில் வைப்பர்.

15ஆரோனும் அவன் புதல்வரும் திருஉறைவிடத்தையும் திருஉறைவிடத்துப் பணிக்கலன்கள் அனைத்தையும் மூடியதும் பாளையத்தினர் புறப்பட்டுச் செல்வர். உடனே கோகாத்தின் புதல்வர் இவற்றைத் தூக்கிச் செல்ல வருவர்; ஆனால், சாகாதபடிக்குத் தூய பொருள்களை அவர்கள் தொடக்கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்கு உள்ளாவர்; கோகாத்தின் புதல்வர் எடுத்துச் செல்ல வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவையே.

16விளக்கிற்கான எண்ணெய், வாசனைத் தூபம், அன்றாட உணவுப் படையல், திருப்பொழிவு எண்ணெய் ஆகியவற்றின் பொறுப்பு குரு ஆரோன் புதல்வன் எலயாசருடையது; திருஉறைவிடம் முழுவதையும், அதிலிருக்கும் அனைத்தையும், தூயகத்தையும் அதிலிருக்கும் பாத்திரங்களையும் அவனே மேற்பார்வை செய்ய வேண்டும்.

17ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

18“லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும்.

19எனவே, புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது; ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர்.

20ஆயினும், புனிதப் பொருள்கள் மூடப்படும்போது கோகாத்தியர் உள்ளே சென்று பார்க்கக் கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்குள்ளாவர்.”

கேர்சோன் என்னும் லேவியர் குல மரபினரின் கடமைகள்

21பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

22கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.

23சந்திப்புக் கூடாரவேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரையுள்ள அனைவரையும் கணக்கெடு.

24பணி செய்ய வேண்டியோரும் சுமைகள் தூக்க வேண்டியோருமான கேர்சோனியர் குடும்பங்களின் பணி இதுவே;

25அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை; திருஉறைவிடத்தின் திரைகள், மூடுதிரையோடு சேர்ந்து சந்திப்புக் கூடாரம், அதன் மேலே உள்ள வெள்ளாட்டுத் தோல், மூடுதிரை, சந்திப்புக் கூடாரத்தின் வாயில்திரை,

26சுற்றுமுற்றத் தொங்கு திரைகள். திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியிருக்கும் முற்றத்தின் வாயில்திரை, அவற்றின் கயிறுகள், அவர்களின் வேலைக்கான அனைத்துக் கருவிகள் ஆகியவை. அவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்வார்கள்.

27ஆரோன், அவன் புதல்வர் கட்டளையிட்டபடியே கேர்சோனியர் புதல்வர் செய்யவேண்டிய எல்லா வேலைகளும், அதாவது அவர்கள் செய்ய வேண்டியவை. சுமக்க வேண்டியவை அனைத்தும் இருக்கும்; தூக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்தையும் நீங்கள் அவர்களிடம் விட்டுவிடுங்கள்;

28இதுவே சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோனியர் குடும்பங்கள் செய்ய வேண்டிய பணி; அவர்களின் பணி குருவாகிய ஆரோன் மகன் இத்தாமரின் மேற்பார்வையின் கீழ் இருக்கும்.

மெராரி என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள்

29மெராரி புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.

30சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.

31சந்திப்புக் கூடாரத்தின் மொத்த வேலையில் அவர்கள் தூக்கிச் செல்ல வேண்டியவற்றிற்கான ஏற்பாடு இதுவே; திருஉறைவிடச் சட்டங்கள், அதன் குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள்.

32சுற்றுமுற்றத்தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான எல்லாக் கருவிகள் அவை தொடர்பான அனைத்துப் பணிகளே. அவர்கள் தூக்கிச்செல்ல வேண்டிய பொருள்களைப் பெயர் குறித்து அவர்களிடம் ஒப்புவி.

33இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி; அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர்.

லேவியரைக் கணக்கெடுத்தல்

34மோசேயும் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களும் சேர்ந்து கோகாத்தியர் புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடுத்தனர்.

35சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரையும் கணக்கெடுத்தனர்.

36குடும்பங்கள் வாரியாக, எண்ணப்பட்டவர்களின் தொகை இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது;

37மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கோகாத்தியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப்பணி செய்தோரின் மொத்தத்தொகை இதுவே.

38தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக கேர்சோன் புதல்வருள் எண்ணப்பட்டோர்:

39சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,

40தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.

41ஆண்டவர் வார்த்தையின்படி மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கேர்சோனியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப் பணி செய்தோரின் மொத்தத் தொகை இதுவே.

42தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர்;

43சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,

44குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் மூவாயிரத்து இருநூறு பேர்.

45மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர் இவர்களே.

46மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் தலைவர்களும் எண்ணியதில் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் எல்லோரும்;

47சந்திப்புக் கூடார வேலையில் சுமை தூக்கும் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்தவர்கள்,

48அவர்களில் எண்ணப்பட்டோர் எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது பேர்.

49மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே அவர்களில் ஒவ்வொருவரும் பணி செய்யவும், சுமை சுமக்கவும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு, ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர் அவர்களைக் கணக்கெடுத்தார்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.