எண்ணிக்கை அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி
1லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனும்,
2இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர்.
3அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், “நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்; மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்; ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்; அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
4மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார்.
5அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்; தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்;
6செய்யவேண்டியது இதுவே; கோராகே! அவன் கூட்டத்தவரே! தூபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்;
7நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்; ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்; லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள்.
8மேலும், மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்;
9இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா?
10அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே! இதனோடு குருத்துவத்தையும் நாடுவீர்களோ?
11ஆதலால், நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்; ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்?
12பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, “நாங்கள் வர மாட்டோம்;
13இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா?
14மேலும், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை; திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை; இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ? நாங்கள் வரவே மாட்டோம்” என்றனர்.
15மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், “இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்; இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை; இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை” என்றார்.
16பின் மோசே கோராகிடம், “நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும் — நீயும் அவர்களும் ஆரோனும் — நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்;
17உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும். நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
18அவ்வாறே, ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்; அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்; அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள்.
19பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான். ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.
20ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
21“ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
22அவர்களோ முகங்குப்புறவிழுந்து, “கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்?” என்றனர்.
23உடனே ஆண்டவர் மோசேயிடம்,
24“கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்” என்றார்.
25மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்; இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.
26அவர் மக்கள் கூட்டமைப்பிடம், “இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்; அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்” என்றார்.
27அவ்வாறே, கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர்.
28மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள்.
29எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.
30ஆனால், ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால்- நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால்- அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.
31இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது;
32தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.
33இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்; தரை தன் வாயை மூடிக்கொண்டது; சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர்.
34அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், “நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே” என்று அஞ்சியோடினர்.
35பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.
தூபகலசங்கள்
36பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
37எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல்.
38ஏனெனில், அவை புனிதமானவை; பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன; அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்; அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்; ஆகவேதான் அவை புனிதமானவை; இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.
39அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்தார்; பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன.
40இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்; இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்; மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே.
ஆரோன் மக்களை மீட்டல்
41ஆயினும், மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, “ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்” என்றனர்.
42மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்; உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது.
43மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள்.
44ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
45நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.” மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர்.
46மோசே ஆரோனிடம், “உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்; ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்ளைநோய் தொடங்கிவிட்டது” என்றார்.
47மோசே சொன்னபடியே ஆரோன் தூபகலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்; அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார்.
48அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்; கொள்ளைநோய் நின்றது.
49அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலாயிரத்து எழுநூறு பேர்.
50கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார்.