உரோமையர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
சகோதரர் சகோதரிகளுக்குத் தீர்ப்பு அளிக்காதீர்கள்
1நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களோடு வாதாடாதீர்கள்.
2நம்பிக்கை கொண்டோர் எல்லா வகை உணவையும் உண்ணலாம் எனக் கருதுகின்றனர்; வலுவற்றவரோ மரக்கறியையே உண்கின்றனர்.
3எல்லாவகை உணவையும் உண்போர் அவ்வாறு உண்ணாதோரை இழிவாக எண்ணலாகாது; உண்ணாதோரும் உண்பவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தல் ஆகாது. ஏனெனில், கடவுள் அவர்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
4வேறொருவருடைய வீட்டு வேலையாளிடம் குற்றம்காண்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் நன்கு செயலாற்றுகிறாரா இல்லையா எனத் தீர்மானிப்பது அவர் தலைவரின் பொறுப்பு. அவர் நன்குதான் செயல்படுவார். ஏனெனில், தலைவர் அவரை நன்கு செயல்பட வைக்கமுடியும்.
5ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்தது எனச் சிலர் கருதுகின்றனர்; வேறு சிலர் எல்லா நாளையும் ஒன்று போலவே கருதுகின்றனர். இத்தகையவற்றில், ஒவ்வொருவரும் தம் மனத்தில் செய்து கொண்ட முடிவின்படி நடக்கட்டும்.
6மேற்சொன்னவாறு ஒரு குறிப்பிட்ட நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பவர் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறார். எல்லா வகை உணவையும் உண்போர் கடவுளுக்கு நன்றிகூறி உண்பதால், ஆண்டவருக்காகவே உண்கின்றனர். அவ்வாறு உண்ணாதிருப்போரும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கின்றனர்; ஏனெனில், அவர்களும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார்கள்.
7நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை.
8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
9ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.
10அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?
11ஏனெனில்,
“ஆண்டவர் சொல்கிறார்;
நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்;
முழங்கால் அனைத்தும்
எனக்கு முன் மண்டியிடும்.
நாவு அனைத்தும் என்னைப் போற்றும்”
என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!
12ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.
சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாய் இராதீர்
13ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும், சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
14தன்னிலேயே எப்பொருளும் தீட்டானது அல்ல என, ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து வாழும் எனக்குத் தெரியும். இது என் உறுதியான நம்பிக்கை. எனினும், ஒரு பொருள் தீட்டானது எனக் கருதுவோருக்கு அது தீட்டானதாகவே இருக்கும்.
15நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மனவருத்தம் உண்டாக்கினால் நீங்கள் அன்பு நெறியில் நடப்பவர்கள் அல்ல. உணவை முன்னிட்டு நீங்கள் அவர்களை அழிவுறச் செய்யாதீர்கள்; அவர்களுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்கவில்லையா?
16ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச்சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக!
17இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது.
18இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர்.
19ஆகையால், அமைதிக்கு வழிவகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக!
20உணவின் பொருட்டுக் கடவுளின் படைப்பை அழிக்காதீர். எல்லா உணவும் தூயதுதான்; ஆனால் அடுத்தவருக்குத் தடையாக அமையும் எந்த உணவும் அதை உண்போருக்குத் தீயதுதான்.
21உங்கள் சகோதரர் சகோதரிகளுக்குத் தடையாக இருக்குமாயின், இறைச்சி உண்பதையோ, திராட்சை மது குடிப்பதையோ, அதுபோன்ற வேறெதையும் செய்வதையோ தவிர்ப்பதே நல்லது.
22இவற்றைப்பற்றிய உறுதியான மனநிலை உங்களுக்கிருந்தால், அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவைச் செயல்படுத்தும்போது மனச்சான்றின் உறுத்தலுக்கு ஆளாகாதோர் பேறுபெற்றோர்.
23நல்லதோ கெட்டதோ என்னும் ஐயத்தோடு உண்போர் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில், அவர்கள் உறுதியான மனநிலையோடு செயல்படவில்லை. உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.