Home Tamil நீதிமொழிகள் அதிகாரம் - 6 - திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,

2 அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,

3 பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்; நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.

4 அதைச் செய்யும்; வரையில் கண்ணயராதே; கண் இமைகளை மூடவிடாதே.

5 நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்; கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்; உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.

6 சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்;

7 அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.

8 எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்; அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.

9 சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?

10 இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்.

11 வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்; ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.

12 போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.

13 அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான்.

14 அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்; எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.

15 ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்; தீடீரென்று அழிந்துபோவான்; மீPளமாட்டான்.

16 ஆண்டவர் வெறுப்பவை ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.

17 அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை,

18 சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,

19 பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

20 பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.

21 அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை; உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.

22 நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.

23 கட்டளை என்பது ஒரு விளக்கு; அறவுரை என்பது ஒளி; கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.

24 அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.

25 உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே; அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.

26 விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்; ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.

27 ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?

28 ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?

29 பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

30 திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.

31 ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்; தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.

32 கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.

33 அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது.

34 ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்;

35 சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் “அவன் சினம் தணியாது.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://www.getcooltricks.com/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Free Email Updates !
Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.