யோவான் நற்செய்தி அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
இயேசுவே உண்மையான திராட்சைச் செடி
1“உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.
2என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.
3நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.
4நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.
5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
6என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
7நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
8நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.
9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.
10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.
12“நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.
13தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.
14நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.
15இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
17நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
உலகு சீடரை வெறுத்தல்
18“உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
19நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே, உலகு உங்களை வெறுக்கிறது.
20பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்!
21என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில், என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
22“நான் வந்து அவர்களிடம் பேசியிராவிட்டால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால், இப்போது அவர்கள் தங்கள் பாவத்துக்குச் சாக்குப் போக்குச் சொல்ல வழியில்லை.
23என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர்.
24வேறு யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யவில்லையென்றால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால், இப்போது அவர்கள் என்னையும் என் தந்தையையும் கண்டும் வெறுத்தார்கள்.
25‘காரணமின்றி என்னை வெறுத்தார்கள்’
என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேறிற்று.
26தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.
27நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்.