சபை உரையாளர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது.
2விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும் பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும். நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும்.
3விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும். இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை. மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது. திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள்.
4ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.
5ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்; ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது; அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள்.
6அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.
7ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு; களிப்புடனிரு; திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு; தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு.
8எப்போதும் நல்லாடை உடுத்து. தலையில் நறுமணத் தைலம் தடவிக்கொள்.
9இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே.
10நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை; சிந்தனை செய்வதுமில்லை; அறிவு பெறுவதுமில்லை; அங்கே ஞானமுமில்லை.
11உலகில் வேறொன்றையும் கண்டேன்; ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையவரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமையவேண்டும்.
12தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போலவும் கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார். எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும்.
ஞானத்தைப் பற்றிய சிந்தனைகள்
13நான் கண்ட வேறொன்றும் உண்டு; இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது.
14சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்; அதை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
15அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் ஓர் ஏழை. அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும். ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை.
16வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது; அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.
17மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன்
முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட,
ஞானமுள்ளவர் அடக்கமுடன்
கூறுவதைக் கேட்பதே நன்று.
18போர்க் கருவிகளைவிட
ஞானமே சிறந்தது.
ஆனால் ஒரே ஒரு தவறு
நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்.