சபை உரையாளர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
கடவுளுக்குக் கொடுக்கும் வாக்கைப் பற்றிய எச்சரிக்கை
1கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போல பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை.
2கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே; எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்; நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்; எனவே, மிகச்சில சொற்களே சொல்.
3கவலை மிகுமானால் கனவுகள் வரும்; சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்.
4கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.
5கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்.
6வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்; தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்?
7கனவுகள் பல வரலாம்; செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.
உலக வாழ்க்கை பயனற்றது
8ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும் நீ காண்பாயானால் வியப்படையாதே. ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள்.
9‘பொதுநலம்’, ‘நாட்டுத் தொண்டு’ என்ற சொற்களும் உன் காதில் விழும்.
10பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது; செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே.
11சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு?
12வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்; ஆனால், அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது.
13உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும்.
14ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால், அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை.
15மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.
16இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்; காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார்.
17அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம்.
18ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்; தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்; அதுவே தகுந்ததுமாகும்.
19கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை.
20தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார்.