பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு.
என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
14அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.15அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. – பல்லவி
19யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.20அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6
அக்காலத்தில்
ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.
இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.
பிறகு அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.