back to top
HomeTamil Mass Readingதிருப்பலி வாசகங்கள் - அக்டோபர் 30, 2025

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2025

பொதுக்காலம் 30ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

கடவுளின் அன்பிலிருந்து எந்தப் படைப்புப் பொருளும் நம்மைப் பிரிக்கவே முடியாது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்துகொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? “உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.

ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 109: 21-22. 26-27. 30-31 (பல்லவி: 26b)

பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்.

21என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்!22நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது. – பல்லவி

26ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்!27இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும். – பல்லவி

30என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.31ஏனெனில், வறியோரின் வலப் பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 19: 38; 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில்

பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்” என்று கூறினர். அதற்கு அவர் கூறியது: “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!

இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். ‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2025 நவ ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24 31
4 11 18 25
Archive 2025 2026
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks