புனித அடால்பெர்ட் – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித ஜார்ஜ் – மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித அடால்பெர்ட் – ஆயர், மறைச்சாட்சி
முதல் வாசகம்
செத்துக்கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 4-10
சகோதரர் சகோதரிகளே,
அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்; உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 31: 2cd-3. 5,7ab. 15b-16 (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்.7abஉமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். – பல்லவி
15bஎன் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.16உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 17: 19
அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.
நற்செய்தி வாசகம்
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-16
அக்காலத்தில்
இயேசு கூறியது: “நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப் பற்றிக் கவலை இல்லை.
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
இக்கொட்டிலைச் சேரா வேறுஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.