பொதுக்காலம் 24ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-16
அன்பிற்குரியவரே,
நான் விரைவில் உன்னிடம் வருவேன் என்னும் எதிர்நோக்குடன் இவற்றை உனக்கு எழுதுகிறேன். நான் வரக் காலம் தாழ்த்தினால், நீ கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இத்திருமுகத்தின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை; இத்திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது.
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமே இல்லை. அது பின்வருமாறு: “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 111: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 2a)
பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 63b, 68b
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35
அக்காலத்தில்
இயேசு, “இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள்.
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.