பொதுக்காலம் 25ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5, 10-11a
நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். ‘எங்கே போகிறீர்?’ என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், ‘எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்’ என்றார்.
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஓடிச் சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: ‘எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப் போல் இருக்கும்! ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்’, என்கிறார் ஆண்டவர்.
‘மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்’ என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10d)
பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 திமொ 1: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45
அக்காலத்தில்
இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.
அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.