பொதுக்காலம் 25ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்கு கையளிக்கவில்லை.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9
மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து, எஸ்ராவாகிய நான் கூறியது:
“கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டுவிட்டன. எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும், அடிமைத்தனத்திற்கும், கொள்ளைக்கும், வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்புவிக்கப்பட்டோம்.
ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் எம் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத்தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுது பார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
தோபி 13: 2,3. 6,7. 8 (பல்லவி: 1a)
பல்லவி: என்றும் வாழும் கடவுள் போற்றி!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில்
இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.