Home » திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2025

திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2025

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-6a, 10

அந்நாள்களில்

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப் படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப் படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;

ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8. 9-10 (பல்லவி: எசா 35:4)

பல்லவி: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.

அல்லது: அல்லேலூயா.

7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். – பல்லவி

8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். – பல்லவி

9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! – பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-10

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 61: 1ac

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 2-11

அக்காலத்தில்

யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரைவிட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

‘இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர்-2025 ஜன ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2025 2026
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks