back to top
HomeTamil Mass Readingதிருப்பலி வாசகங்கள் - ஜூலை 2, 2025

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 2, 2025

பொதுக்காலம் 13ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

பணிப்பெண்ணின் மகன், என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 21: 5, 8-20

ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தபொழுது அவருடைய வயதோ நூறு. அந்தக் குழந்தை வளர்ந்து பால் குடியும் மறந்தது. அப்படிப் பால் குடிப்பதை நிறுத்திய நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து அளித்தார்.

பின்னர் எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு, ஆபிரகாமை நோக்கி, “இந்தப் பணிப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும். ஏனென்றால், பணிப் பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது” என்றார். தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது.

அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, “பையனையும் பணிப் பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதை எல்லாம் அப்படியே செய். ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழி மரபு விளங்கும். உன் பணிப் பெண்ணின் மகனும் உன் வித்தாய் இருப்பதால், அவனிடமிருந்தும் இனம் ஒன்று தோன்றச் செய்வேன்” என்றார்.

எனவே ஆபிரகாம் காலையில் எழுந்து, அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தார்; அவற்றை அவள் தோள்மேல் வைத்து குழந்தையையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அவளும் புறப்பட்டுப் போய் பெயேர்செபா என்னும் பாலை நிலத்தில் அலைந்து திரிந்தாள். தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள். பின்பு அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். ‘குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன்’ என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள்.

அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார். நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக்கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனம் ஒன்று தோன்றச் செய்வேன்” என்றார்.

அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவன் ஆனான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 6-7. 9-10. 11-12 (பல்லவி: 6a)

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். – பல்லவி

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி

11வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.12வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

குறித்த காலம் வருமுன்னே, எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என்று கத்தினார்கள்.

அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்” என்று வேண்டின. அவர் அவற்றிடம், “போங்கள்” என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.

பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2025 ஆக ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2025 2026
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks