Home » Tamil » நீதிமொழிகள் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

சில நல்லுரைகள்

1பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,

2அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,

3பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்; நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.

4அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே; கண் இமைகளை மூடவிடாதே.

5நீ *வேடன் கையில்* அகப்பட்ட மான் போலிருப்பாய்; கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்; உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.

சோம்பேறியாயிராதே

6சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்;

7அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.

8எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்; அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.

9சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?

10இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்.

11வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்; ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.

கயவனின் போக்கு

12போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.

13அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான்.

14அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்; எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.

15ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்; திடீரென்று அழிந்துபோவான்; மீளமாட்டான்.

கடவுளுக்கு வெறுப்பானவை

16ஆண்டவர் வெறுப்பவை ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.

17அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை,

18சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,

19பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

கற்புநெறி வழுவாமை

20பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.

21அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை; உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.

22நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.

23கட்டளை என்பது ஒரு விளக்கு; அறிவுரை என்பது ஒளி; கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.

24அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.

25உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே; அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.

26விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்; ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.

27ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?

28ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?

29பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

30திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.

31ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்; தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.

32கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.

33அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது.

34ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்;

35சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.


6:10-11 நீமொ 24:33-34.

6:5 ‘கையில்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.