தோபித்து அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
இரகுவேலின் வீட்டில்
1அவர்கள் எக்பத்தானாவை அடைந்தபொழுது தோபியா அசரியாவிடம், “சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்” என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், “இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும்” என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று,
2“இவ்விளைஞர் என் உறவினர் தோபித்தைப்போல் இல்லையா?” என்று தம் மனைவி எதினாவிடம் வியந்து கூறினார்.
3எதினா அவர்களை, “இளைஞர்களே, எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாங்கள் நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நப்தலியின் மக்கள்” என்றார்கள்.
4அதற்கு எதினா அவர்களிடம், “எங்கள் உறவினர் தோபித்தைத் தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள், “அவரை எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். பின்பு, “அவர் நலமா?” என்று கேட்டார்.
5அவர்கள், “அவர் உயிரோடு, நலமாக இருக்கிறார்” என்றார்கள். “என் தந்தைதான் அவர்” என்றார் தோபியா.
6உடனே இரகுவேல் துள்ளி எழுந்து அவரை முத்தமிட்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
7“தம்பி, உனக்கு மங்கலம் உண்டாகுக! நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன்! தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர் பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி!” என்று கூறித் தம் உறவினர் தோபியாவின் தோள் மீது சாய்ந்து அழுதார்.
8அவருடைய மனைவி எதினாவும் தோபித்துக்காக அழுதார். அவர்களுடைய மகள் சாராவும் அழுதாள்.
9பிறகு, இரகுவேல் தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார்.
அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், “சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்துகொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்” என்றார்.
10இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞரிடம், “நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்து கொள்ள உன்னைத்தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத்தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை; ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன்.
11அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்” என்றார். அதற்குத் தோபியா, “நீங்கள் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ணமாட்டேன். பருக மாட்டேன்” என்றார். இரகுவேல், “சரி, செய்கிறேன்; மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்குரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக; உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக” என்றார்.
தோபியா, சாரா திருமணம்
12இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். “மோசேயின் நூலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக் கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக” என்றார்.
13பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார்.
14அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.
15இரகுவேல் தம் மனைவி எதினாவை அழைத்து அவரிடம், “அன்பே, மற்றோர் அறையை ஏற்பாடு செய்து அவளை அங்கு அழைத்துச் செல்” என்றார்.
16இரகுவேல் தமக்குக் கூறியபடி அவர் சென்று அறையில் படுக்கையை ஏற்பாடு செய்தார்; தம் மகளை அங்கு அழைத்துச் சென்று, அவளுக்காக அழுதார். பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம், “அஞ்சாதே, மகளே, விண்ணக ஆண்டவர் உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். துணிவுகொள், மகளே!” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.