தோபித்து அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
தோபித்தின் புகழ்ப்பாவும் அறிவுரையும்
இரபேல் தம்மை வெளிப்படுத்தல்
1திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, “மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு; உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு” என்றார்.
2அதற்கு அவர், “அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும்? நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்;
3ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்; என் மனைவியை நலம் பெறச் செய்தார்; பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்; உங்களுக்கு நலம் அளித்தார். இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்?” என்று கேட்டார்.
4தோபித்து அவரிடம், “மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி உள்ளது” என்றார்.
5பின்னர் இரபேலை அழைத்து, “நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக” என்று கூறினார்.
6அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: “கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள்.
7மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது.
8அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது.
9தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பருவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்.
10பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.
11“முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது” என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
12நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.
13நீர் உணவு அருந்துவதைவிட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம்செய்யத் தயங்காதபோது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்.
14அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.
15நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்” என்றார்.
16அதிர்ச்சி மேலிட இருவரும் அச்சத்துடன் குப்புற விழுந்தனர்.
17இரபேல், அவர்களிடம், “அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதி பெருகட்டும். கடவுளை என்றென்றும் புகழுங்கள்.
18என் விருப்பப்படியன்று, கடவுளின் திருவுளப்படியே நான் உங்களோடு இருந்தேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
19நான் ஒன்றும் உண்ணவில்லை; நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்துகொள்ளுங்கள்.
20இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்; கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றையெல்லாம் எழுதிவையுங்கள்” என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.
21அவர்கள் தரையிலிருந்து எழுந்தபோது இரபேலைக் காணமுடியவில்லை.
22அவர்கள் கடவுளைப் பாடிப் புகழ்ந்தார்கள்; கடவுளின் தூதர் அவர்களுக்குத் தோன்றி ஆற்றிய மாபெரும் செயல்களுக்காகக் கடவுளின் புகழை அறிக்கையிட்டார்கள்.