தோபித்து அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எக்பத்தானாவுக்குப் பயணம்
1இளைஞர் புறப்பட்டுச் சென்றார். வானதூதர் உடன் சென்றார். அவர்களது நாயும் வெளியேறி அவர்களைத் தொடர்ந்து சென்றது. பொழுது சாயும்வரை அவர்கள் இருவரும் பயணம் செய்து, திக்ரீசு ஆற்றோரமாய்த் தங்கினார்கள்.
2தோபியா தம் பாதங்களைக் கழுவத் திக்ரீசு ஆற்றில் இறங்கினார். பெரும் மீன் ஒன்று திடீரென்று நீரிலிருந்து துள்ளிக் குதித்து அவரது காலைக் கவ்வ முயன்றது. எனவே அவர் கதறினார்.
3வானதூதர் அவரிடம், “பிடியும், மீனை உறுதியாகப் பிடியும்” என்றார். இளைஞர் மீனைப் பற்றியிழுத்து அதைக் கரைக்குக் கொண்டுவந்தார்.
4வானதூதர் அவரிடம், “மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளும் ஏனெனில் அவை மருந்தாகப் பயன்படும். ஆனால் குடலை எறிந்துவிடும்” என்றார்.
5அவ்வாறே இளைஞர் மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டார். மீனின் ஒருபகுதியைச் சுட்டுச் சாப்பிட்டார். மீதியை உப்பிட்டு வைத்துக்கொண்டார்
6மேதியாவை நெருங்கும்வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
7பின் இளைஞர் வானதூதரிடம், “சகோதரர் அசரியா, மீனின் இதயம், ஈரல், பித்தப்பை ஆகியவை எதற்கு மருந்தாகப் பயன்படும்?” என்று வினவினார்.
8அதற்குத் தூதர் அவரிடம், “பேயாவது தீய ஆவியாவது பிடித்திருக்கும் ஒருவர்முன் மீனின் இதயத்தையும் ஈரலையும் புகையச் செய்தால், அவர்கள் முற்றிலும் நலம் பெறுவார்கள். இனி ஒருபோதும் அது அவர்களை அண்டாது.
9வெண்புள்ளிகள் உள்ள மனிதரின் கண்களில் பித்தப்பையைத் தடவி ஊதினால் அவர்கள் பார்வை பெறுவார்கள்” என்றார்.
10அவர்கள் மேதியா நாட்டினுள் சென்று எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
11இரபேல் இளைஞரை நோக்கி, “சகோதரர் தோபியா” என்று அழைத்தார். அதற்கு அவர், “என்ன?” என்றார். அவரிடம் அவர், “இன்று இரவு நாம் இரகுவேலின் வீட்டில் தங்கவேண்டும். அவர் உமக்கு உறவினர் அவருக்குச் சாரா என்னும் ஒரு மகள் இருக்கிறாள்.
12அவளைத் தவிர அவருக்கு வேறு குழந்தைகள் இல்லை. வேறு எவரையும்விட நீரே அவளுக்கு நெருங்கிய உறவினரானதால், அவளை மணந்துகொள்ளும் உரிமை உமக்கே உண்டு; அவளுடைய தந்தையின் உடைமைகளை அடையவும் உமக்கு உரிமை உண்டு. அவள் அறிவுள்ளவள், துணிவு மிக்கவள், மிக அழகானவள். அவளுடைய தந்தையும் நல்லவர்” என்றார்.
13இரபேல் தொடர்ந்து, “சகோதரரே, அவளை மணந்து கொள்ளும் உரிமை உமக்கு உள்ளதால் நான் சொல்வதைக் கேளும். இன்று இரவே அவளைப்பற்றி இரகுவேலிடம் பேசி, அவளை உமக்கு மனைவியாகக் கொடுக்கும்படி கேட்போம். இராகியிலிருந்து நாம் திரும்பும்பொழுது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம். நீர் அவளை மணப்பதற்கு இரகுவேல் தடை எதுவும் சொல்ல முடியாது; மற்றொருவருக்கு அவளை நிச்சயம் செய்யவும் முடியாது என்பது எனக்குத் தெரியும். அவ்வாறு செய்தால் மோசேயின் நூலில் விதித்துள்ளபடி அவர் சாவுக்கு உள்ளாவார்; ஏனெனில் தம் மகளை மணப்பதற்கு மற்ற எல்லா ஆண்களையும்விட உமக்கே அதிக உரிமை உண்டு என அவருக்கும் தெரியும். இப்பொழுது, சகோதரரே, நான் சொல்வதைக் கேளும். பெண்ணைப் பற்றி இன்று இரவு பேசி, அவளை உமக்கு நிச்சயிப்போம். இராகியிலிருந்து நாம் திரும்பும்பொழுது, அவளை நம்முடன் அழைத்துக் கொண்டு வீடு திரும்புவோம்” என்றார்.
14அப்பொழுது தோபியா மறுமொழியாக இரபேலிடம், “சகோதரர் அசரியா, அவள் ஆண்கள் எழுவருக்கு மண முடித்துக் கொடுக்கப்பட்டவள் என்றும், மணவறையில் அவளை அணுகிய அன்றிரவே அவர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பேய் அவர்களைக் கொன்றது என்றும் கேள்வியுற்றியிருக்கிறேன்.
15இப்போது எனக்கு அச்சமாக உள்ளது; ஏனெனில் அவளுக்குப் பேய் ஒரு தீங்கும் இழைப்பதில்லை; ஆனால் அவளை நெருங்குகின்றவரையே கொன்றுவிடுகிறது. என் தந்தைக்கு நான் ஒரே மகன். நான் இறக்க நேர்ந்தால், என்னைப்பற்றிய வருத்தம் என்தாய் தந்தையின் வாழ்வை முடித்து, அவர்களைக் கல்லறைக்குக் கொண்டு போய்விடும் என அஞ்சுகிறேன். அவர்களை அடக்கம் செய்ய வேறு மகன் இல்லை” என்றார்.
16அதற்கு வானதூதர் அவரிடம், “தம் தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை மணந்துகொள்ள உம் தந்தை உமக்குக் கட்டளையிட்டதை மறந்துவிட்டீரா? ஆதலால் நான் சொல்வதைக் கேளும். சகோதரரே, அந்தப் பேயைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சாராவை மணந்து கொள்ளும். இன்று இரவே அவள் உம்முடைய மனைவி ஆவாள் என்பது உறுதி.
17நீர் மணவறையில் நுழைந்ததும் மீனின் ஈரலிலிருந்தும் இதயத்திலிருந்தும் ஒரு சிறு பகுதியை எடுத்துத் தூபத்திற்கான நெருப்பிலிடும் அதிலிருந்து கிளம்பும் புகையைப் பேய் மோந்தவுடன் அது ஓடிவிடும்; இனி ஒருபோதும் அவளை அண்டாது.
18அவளுடன் நீர் கூடுமுன் முதலில் நீங்கள் இருவரும் எழுந்து நின்று மன்றாடுங்கள்; விண்ணக ஆண்டவர் உங்கள்மீது இரங்கிக் காத்தருள வேண்டுங்கள். அஞ்சாதீர்! உலகம் உண்டாகுமுன்பே அவள் உமக்கென்று குறிக்கப் பெற்றவள். நீர் அவளைப் பேயினின்று விடுவிக்க, அவள் உம்மோடு வருவாள். அவள் வழியாக உமக்குக் குழந்தைகள் பிறக்கும். அவர்கள் உமக்குச் சகோதரர்கள்போல் இருப்பார்கள் என நம்புகிறேன். எனவே கவலை வேண்டாம்” என்றார்.
19சாரா தம் தந்தை வழி உறவினர் என்று சொன்ன இரபேல் கூறியதைக் கேட்ட தோபியா அவளை மிகவும் விரும்பித் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.