இனிமைமிகு பாடல் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

இனிமைமிகு பாடல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!

2 உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்; அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை; உன் வயிறு கோதுமை மணியின் குவியல்; லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.

3 உன் முலைகள் இரண்டும் இரு மான் குட்டிகள் போன்றவை; கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை.

4 உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது; உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை; பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை; உம் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை; தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை.

5 உன் தலை கர்மேல் மலைபோல் நிமிர்ந்துள்ளது; உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது; அதன் சுருள்களுள் அரசனும் சிறைப்படுவான்.

6 அன்பே! இன்பத்தின் மகளே! நீ எத்துணை அழகு! எத்துணைக் கவர்ச்சி!

7 இந்த உன் வளர்த்தி பேரீச்சைக்கு நிகராகும்; உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாகும்.

8 ஆம், பேரீச்சையின்மேல் நான் ஏறுவேன்; அதன் பழக்குலைகளைப் பற்றிடுவேன்” என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள்போல் ஆகுக! உன் மூச்சு கிச்சிலிபோல்; மணம் கமழ்க!

9 இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும் இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்!

10 நான் என் காதலர்க்குரியள்; அவர் நாட்டம் என்மேலே!

11 என் காதலரே, வாரும்; வயல்வெளிக்குப் போவோம்; மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.

12 வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என்; காதலைப் பொழிவேன்.

13 காதற்கனிகளின் மணம் கமழுகின்றது; இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது; புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.

Free Email Updates !
Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.