பிலிப்பியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
5. எதிரிகள் குறித்து எச்சரிக்கை
மீட்புக்கு வழி
1இறுதியாக, என் சகோதர சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடையுங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையாயில்லை; உங்கள் நன்மைக்காகவே எழுதுகிறேன்.
2அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்; அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். ‘உறுப்பு சிதைப்போரைக்’ குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
3ஏனெனில், உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்.
4உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரைவிட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும்.
5நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.
6திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்.
7ஆனால், எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.
8உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.
9கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
10கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.
11அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.
இலக்கை நோக்கி ஓடுதல்
12நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.
13அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு,
14பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.
15எனவே, நம்மில் நிறைவு அடைந்தோர் யாவருக்கும் இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். எதைப்பற்றியாவது நீங்கள் மாறுபட்டக் கருத்துக் கொண்டிருந்தால் அதைப்பற்றிய உண்மையைக் கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
16நாம் எந்த நிலையை அடைந்திருந்தாலும், அதற்கேற்பத் தொடர்ந்து நடப்போம்.
17சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.
18கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன்.
19அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.
20நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.
21அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.