Home » Tamil » நெகேமியா அதிகாரம் – 2 – திருவிவிலியம்

நெகேமியா அதிகாரம் – 2 – திருவிவிலியம்

நெகேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

நெகேமியா எருசலேமுக்கு வருதல்

1மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.

2மன்னர் என்னைப் பார்த்து, “ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மனவேதனையே அன்றி வேறொன்றுமில்லை” என்றார். நானோ மிகவும் அஞ்சினேன்.

3நான் மன்னரை நோக்கி, “மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?” என்றேன்.

4அதற்கு மன்னர் என்னை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன்.

5நான் மன்னரைப் பார்த்து, “நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால் என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்” என்று கூறினேன்.

6அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.

7மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும்.

8கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.

9யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியின் ஆளுநர்களிடம் வந்து, மன்னரின் மடல்களை அவர்களிடம் தந்தேன். மன்னரோ என்னோடு படைத்தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்திருந்தார்.

10ஓரோனியனான சன்பலாற்றும், அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும் அதைக் கேள்வியுற்றபோது, இஸ்ரயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்துவிட்டானே என்று எரிச்சலுற்றனர்.

11நான் எருசலேமுக்கு வந்து அங்கே மூன்றுநாள் தங்கி இருந்தேன்.

12நான் எருசலேமுக்குச் செய்யுமாறு கடவுள் என் உள்ளத்தில் தூண்டியிருந்த எதையும் நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. ஓரிரவு நான் எழுந்து சில ஆள்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நான் ஏறிச்சென்ற விலங்கைத் தவிர வேறொரு கால்நடையும் என்னிடமில்லை.

13நான் இரவில் பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று ‘நரி’ நீருற்றைக் கடந்து, ‘குப்பைமேட்டு’ வாயிலுக்கு வந்தேன். அங்கிருந்து, இடிந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், தீக்கிரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன்.

14அங்கிருந்து ‘ஊருணி வாயிலுக்கும்’, ‘அரசனின் குளத்திற்கும்’ சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை.

15எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், ‘பள்ளத்தாக்கு வாயில்’ வழியாகத் திரும்பி வந்தேன்.

16நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை.

17பின்னர் நான் அவர்களைப் பார்த்து, “எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதையும் நீங்களே பாருங்கள்! எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைக் கட்டியெழுப்புவோம், வாருங்கள்” என்று சொன்னேன்.

18என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் “வாரும் கட்டுவோம்” என்றனர்; நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.

19ஓரோனியனான சன்பலாற்றும் அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். “நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டனர்.

20நானோ அவர்களுக்கு மறுமொழியாக, “விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை” என்றேன்.


2:3 2 அர 25:8-10; 2 குறி 36:19; எரே 52:12-14.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.