அபக்கூக்கு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
அபக்கூக்குக்கு ஆண்டவரின் பதிலுரை
1[நான் காவல் மாடத்தில் நிற்பேன்;
கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்;
என் வாயிலாக ஆண்டவர்
என்ன கூறப்போகின்றார் என்றும்
என் முறையீட்டுக்கு
என்ன விடையளிப்பார் என்றும்
கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.
2ஆண்டவர் எனக்கு அளித்த
மறுமொழி இதுவே:
“காட்சியை எழுதிவை;
விரைவாய் ஓடுகிறவனும்
படிக்கும் வண்ணம்
பலகைகளில் தெளிவாய் எழுது.
3குறித்த காலத்தில்
நிறைவேறுவதற்காகக்
காட்சி இன்னும் காத்திருக்கின்றது;
முடிவை நோக்கி
விரைந்து செல்கின்றது.
ஒருக்காலும் பொய்க்காது.
அது காலந்தாழ்த்தி
வருவதாகத் தோன்றினால்,
எதிர்பார்த்துக் காத்திரு;
அது நிறைவேறியே தீரும்;
காலம் தாழ்த்தாது.
4இதை நம்பாதவரோ உள்ளத்திலே
நேர்மையற்றவராய் இருப்பர்;
நேர்மையுடையவரோ
தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
நேர்மையற்றோருக்கு வரும் அழிவு
5மேலும் செல்வம்* ஏமாற்றிவிடும்;
ஆணவக்காரர்
நிலைத்து நிற்கமாட்டார்;
அவர்களது பேராசை
பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது;
சாவைப்போல் அவர்களும்
போதும் என்று நிறைவு அடைவதில்லை;
வேற்றினத்தார் யாவரையும்
அவர்கள் தங்கள் பக்கம்
சேர்த்துக் கொள்கின்றனர்;
மக்களினங்கள் அனைத்தையும்
தங்கள் உடைமை ஆக்கிக்
கொள்கின்றனர்.
6ஆனால், தோல்வியுற்ற அனைவரும்
அவர்கள் மேல் பழிமொழிகளையும்,
ஏளனப் பாடல்களையும்
இப்படிப் புனைவார்கள்;
‘தமக்குரியது அல்லாததைத்
தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு
ஐயோ கேடு!
இன்னும் எத்துணைக் காலத்திற்கு
இப்படிச் செய்வர்?
அவர்கள் தங்கள் மேல்
அடைமானங்களையே
சுமத்திக் கொள்கின்றார்கள்!’
7உமக்குக் கடன் கொடுத்தவர்கள்
திடீரென
எதிர்த்தெழ மாட்டார்களோ?
உன்னைத் திகிலடையச்
செய்கின்றவர்கள்
விழித்தெழ மாட்டார்களோ?
அப்பொழுது நீ அவர்களுக்குக்
கொள்ளைப் பொருள் ஆவாய்.
8நீ பல நாட்டினரைச் சூறையாடினாய்;
மனித இரத்தத்தைச் சிந்தினாய்;
நாட்டுக்கும், நகர்களுக்கும்
அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்
கொடுமைகள் செய்தாய்;
இவற்றிற்காக,
மக்களினங்களுள் எஞ்சியோர் யாவரும்
உன்னைச் சூறையாடுவர்.
9தீமையின் பளுவிலிருந்து தப்ப,
தான் வாழுமிடத்தை
மிக உயரத்தில் அமைக்க,
தன் குடும்பத்திற்காக
நேர்மையற்ற வழியில்
பொருள் சேர்க்கிறவனுக்கு
ஐயோ கேடு!
10உன் திட்டங்களால்
உன் குடும்பத்திற்கு
மானக்கேட்டை நீ வருவித்தாய்;
மக்களினங்கள் பலவற்றை
அழித்தமையால்,
உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.
11சுவரிலிருக்கும் கற்களும்
உனக்கு எதிராகக் கூக்குரலிடும்;
கட்டடத்தின் உத்திரம்
அதை எதிரொலிக்கும்
12இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி,
அநீதியால்
பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு
ஐயோ கேடு!
13மக்களினங்களின் உழைப்பு
நெருப்புக்கு இரையாவதும்,
வேற்றினத்தாரின் களைப்பு
வீணாகப் போவதும்
படைகளின் ஆண்டவரது
திருச்செயல் அன்றோ?
14தண்ணீரால்
கடல் நிரம்பியிருப்பது போல
ஆண்டவரின்
மாட்சியைப் பற்றிய அறிவால்
மண்ணுலகு நிறைந்திருக்கும்.
15அடுத்திருப்பவர் மீது
கொண்ட சினத்தினால்
அவர்களைக் குடிவெறியர்களாக்கி
அவர்களது திறந்த மேனியின்
அலங்கோலத்தைக் காணும்வரை
குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு!
16நீ மேன்மை அடையாது
ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்;
நீயும் குடி,
குடித்துவிட்டுத் தள்ளாடு;
ஆண்டவரின் வலக்கையிலுள்ள
தண்டனைக்கலம்
உன்னிடம் திரும்பி வரும்;
அப்போது உன் மேன்மை
மானக்கேடாய் மாறும்.
17லெபனோனுக்கு நீ செய்த கொடுமை
உன் மீது வந்து விழும்;
நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே
உன்னை நடுக்கமுறச் செய்யும்;
ஏனெனில், நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்;
நாட்டுக்கும் நகர்க்கும்
அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்
கொடுமைகள் செய்தாய்.
18சிற்பி செதுக்கிய சிலையாலும்,
வார்ப்படத்தில் வடித்தெடுத்த
படிமத்தாலும் பயன் என்ன?
அவை பொய்களின் பிறப்பிடமே!
ஆயினும், சிற்பி தான் செதுக்கிய
ஊமைச் சிலைகளாகிய
கைவேலைகளிலே
நம்பிக்கை வைக்கிறான்.
19மரக்கட்டையிடம்,
‘விழித்தெழும்’ என்றும்
ஊமைக் கல்லிடம்
‘எழுந்திரும்’ என்றும்
சொல்கிறவனுக்கு ஐயோ கேடு!
அவை ஏதேனும்
வெளிப்பாடு அருள முடியுமோ?
பொன் வெள்ளியால்
பொதியப்பட்டிருப்பினும்
உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!
20ஆனால் ஆண்டவர்
தம் புனித கோவிலில்
வீற்றிருக்கின்றார்;
அவர் திருமுன்
மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக.