கொலோசையர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
4. கிறிஸ்தவ வாழ்வு
புதுப்பிக்கப்படும் மனித இயல்பு
1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
2இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.
3ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.
4கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
5ஆகவே, உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.
6இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன.
7இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள்.
8ஆனால், இப்பொழுது நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள். பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது.
9ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில், நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு,
10புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்.
11புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.
12நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே, அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்.
13ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
14இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.
15கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.
16கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
17எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
குடும்ப ஒழுக்கம்
18திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்.
19திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள்.
20பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.
21பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.
22அடிமைகளே, இவ்வுலகில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு, முற்றிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக்கொள்ளாமல், ஆண்டவருக்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள்.
23நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்.
24அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்.
25ஏனெனில், ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார்.