பாரூக்கு அதிகாரம் – 3 – திருவிவிலியம்

பாரூக்கு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 “எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ரயேலின் கடவுளே, கடுந்துயரில் உழலும் ஆன்மாவும் கலக்கமுறும் உள்ளமும் உம்மை நோக்கிக் கூக்குரலிடுகின்றன.

2 ஆண்டவரே, இக்குரலுக்கு செவிசாய்த்தருளும், எங்களுக்கு இரக்கம்காட்டும்; ஏனெனில் நாங்கள் உம் முன்னிலையில் பாவம் செய்தோம்.

3 நீர் என்றென்றும் ஆட்சி செலுத்துகிறீர்.

4 நாங்களோ எந்நாளும் அழிந்து கொண்டிருக்கிறோம். எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ரயேலின் கடவுளே, இஸ்ரயேலர் நாங்கள் இறந்தவர்களைப்போல் ஆகிவிட்டோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; தங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய உமது குரலுக்குச் செவிசாய்க்காமல், உம் முன்னிலையில் பாவம் செய்தோருடைய மக்களின் வேண்டுதலையும் ஏற்றருளும். அவர்களது செயலால்தான் எங்களை இக்கேடுகள் சூழ்ந்துள்ளன.

5 எங்கள் மூதாதையரின் முறைகேடுகளை நினைவில் கொள்ளாதீர். மாறாக, இக்கட்டான இந்நேரத்தில் உம் கைவன்மையையும் பெயரையும் நினைவுகூரும்.

6 நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர். ஆண்டவரே, உம்மையே நாங்கள் உம்மைப் போற்றுவோம்;

7 ஏனெனில், நாங்கள் உம்மைத் துணைக்கு அழைக்கும் பொருட்டே, உம்மைப் பற்றிய அச்சத்தை எங்கள் உள்ளத்தில் பதித்துள்ளீர். நாடுகடத்தப்பட்ட இந்நிலையில் நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்; ஏனெனில் உம் முன்னிலையில் பாவம் செய்த எங்கள் மூதாதையரின் தீச்செயல்கள் அனைத்தையும் எங்கள் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டோம்.

8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைவிட்டு விலகிச் சென்ற எங்கள் மூதாதையரின் எல்லாத் தீச்செயல்களையும் முன்னிட்டு, இதோ! நீர் எங்களைச் சிதறிடித்துள்ள இடத்தில் இன்று அடிமைகளாய் இருக்கிறோம்; இகழ்ச்சிக்கும் சாபத்திற்கும் தண்டனைக்கும் நீர் எங்களை ஆளாக்கியிருக்கிறீர்.”

9 இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்.

10 இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களொடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்?

11 பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்?

12 ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய்.

13 கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால், என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய்.

14 அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய்.

15 ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்?

16 வேற்றினத்தாரின் தலைவர்கள் என்ன ஆனார்கள்? மண்ணுலகின்மீது காட்டு விலங்குகளை அடக்கியாள்வோர் என்ன ஆயினர்?

17 வானத்துப் பறவைகளைக்கொண்டு விளையாட்டில் ஈடுபடுவோர் எங்கே? பொன்னையும் வெள்ளியையும் குவித்து வைப்போர் எங்கே? மனிதர் இவற்றில் நம்பிக்கை வைக்கின்றனர். அவர்களது ஆசைக்கு ஓர் அளவில்லை.

18 அவர்கள் பணம் சேர்க்கத் திட்டம் தீட்டினார்கள்; அதே கவலையாய் இருந்தார்கள்; ஆனால் அவர்களது வேலையின் சுவடு ஒன்றும் காண்பதற்கில்லை.

19 அவர்கள் அனைவரும் மறைந்து விட்டார்கள்; பாதாளத்திற்குச் சென்றுவிட்டார்கள்; அவர்களுக்குப் பதிலாக வேறு மனிதர் தோன்றினர்.

20 பிந்திய தலைமுறையினர் ஒளியைக் கண்டனர்; மண்ணுலகில் குடியிருந்தனர்; ஆனால் மெய்யறிவின் வழியை அறிந்திலர்;

21 அதன் நெறிகளைக் கண்டிலர்; அதை அடைந்திலர்; அவர்களுடைய மக்கள் ஞானத்தின் வழியைவிட்டுத் தொலைவில் சென்றார்கள்.

22 கானான் நாட்டில் அதைப்பற்றிக் கேள்விப்பட்டவர் யாருமில்லை; தேமான் நாட்டில் அதைக் கண்டவர் எவருமில்லை.

23 மண்ணுலகின்மீது அறிவுக் கூர்மையைத் தேடும் ஆகாரின் மக்களும் மெரான், தேமான் நாட்டு வணிகர்களும் கட்டுக் கதை புனைவோரும் அறிவுக் கூர்மையை நாடுவோரும் ஞானத்தை அடையும் வழியை அறிந்து கொள்ளவுமில்லை; அதன் நெறியை எண்ணிப் பார்க்கவுமில்லை.

24 இஸ்ரயேலே, கடவுளின் இல்லம் எத்துணைப் பெரிது! அவரது ஆட்சிப் பரப்பு எத்துணை விரிந்தது!

25 அது மிகப் பெரிது, எல்லையற்றது! உயர்ந்தது, அளவு கடந்தது!

26 அங்கேதான் அரக்கர்கள் தோன்றினார்கள்; தொடக்கமுதல் புகழ்பெற்றிருந்த அவர்கள் மிகவும் உயரமானவர்கள், போரில் வல்லவர்கள்.

27 எனினும் கடவுள் அவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை; மெய்யறிவின் வழியை அவர்களுக்குக் காட்டவுமில்லை.

28 அறிவுத்திறன் இல்லாததால் அவர்கள் அழிந்தார்கள்; தங்கள் மடமையால் மடிந்தார்கள்.

29 வானகத்திற்கு ஏறிச்சென்று, ஞானத்தைப் பெற்றுக் கொண்டவர் யார்? முகில்களினின்று அதைக் கீழே கொணர்ந்தவர் யார்?

30 கடல் கடந்து சென்று அதைக் கண்டுபிடித்தவர் எவர்? பசும்பொன் கொடுத்து அதை வாங்குபவர் எவர்?

31 அதை அடையும் வழியை அறிபவர் எவருமில்லை; அதன் நெறியை எண்ணிப் பார்ப்பவருமில்லை.

32 ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக் கால்நடைகளால் நிரப்பினார்.

33 அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது.

34 விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன.

35 அவர் அவற்றை அழைத்தார்; அவை, “இதோ, உள்ளோம்” என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின.

36 இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர்,

37 மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும், தாம், அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே.

38 அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது.

Related Articles

Free Email Updates !
Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.