புனிதர்கள் மறைப்பணியாளர் ஆன்ரு டுங் லாக், தோழர்கள் – மறைச்சாட்சியர் (நினைவு)
புனிதர்கள் மறைப்பணியாளர் ஆன்ரு டுங் லாக், தோழர்கள் – மறைச்சாட்சியர்
முதல் வாசகம்
எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 1-9
நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந் தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப் பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்ட பின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.
கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சி செலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்.
அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்துகொண்டோர் மீது இருக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 5)
பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி
4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி
6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள் மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22
அக்காலத்தில்
இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.