Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2026

திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2026

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 34ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

இனி இரவே இராது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7

வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.

பின்னர் அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 3-5. 6-7 (பல்லவி: 1 கொரி 16: 22; திவெ 22: 20b)

பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். – பல்லவி

3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.4பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.5கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. – பல்லவி

6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.7அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர்-2026 டிச ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2026 2027
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.