பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (வி.நினைவு)
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் (வி.நினைவு)
பொதுக்காலம் 10ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
எலிசா புறப்பட்டுப் போய் எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 19-21
அந்நாள்களில்
எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர்மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார்.
எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 16: 1-2a,5. 7-8. 9-10 (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி
9என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.10ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 2: 19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையைத் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த மரியா பேறுபெற்றவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.