Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2027

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2027

ஆண்டவரின் திருமுழுக்கு

விழா

முதல் வாசகம்

நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

ஆண்டவர் கூறுவது:

தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.

எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.

நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.

என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 3)

பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.

2இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். – பல்லவி

4அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். – பல்லவி

5ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.6சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-9

அன்பார்ந்தவர்களே,

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 29

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்றார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில்

யோவான் அறிவித்ததாவது: “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப்போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2027 பிப் ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2027 2028
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks