Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜூலை 29, 2025

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 29, 2025

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 17ஆம் வாரம் – செவ்வாய்

நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 33: 7-11; 34: 5-9, 28

அந்நாள்களில்

மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியே உள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.

மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்று கொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர். மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார். கூடார நுழைவாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழைவாயிலில் நின்று கொண்டே மக்கள் அனைவரும் வணங்கித் தொழுவர். ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டு அகலாமல் இருப்பார்.

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, “என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.

அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகைகளின் மேல் எழுதினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 6-7. 8-9. 10-11. 12-13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

6ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.7அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். – பல்லவி

8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்ளுபவரல்லர். – பல்லவி

10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. – பல்லவி

12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில்

சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2025 ஆக ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2025 2026
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.