கலாத்தியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
அன்புப் பணிக்குச் சில நெறிமுறைகள்
1சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
2ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.
3பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மையே ஏய்த்துக் கொள்ளுகின்றனர்.
4ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தாம் செய்த செயல்களைப்பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும்.
5ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக் கொள்ளட்டும்.
6இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக்கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்கவேண்டும்.
7ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலிசெய்ய முடியும் என நினைக்காதீர்கள். ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்.
8தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர் அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வர். ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவி அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்.
9நன்மைசெய்வதில் மனம்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம்.
10ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன்வருவோம்.
5. முடிவுரை
எச்சரிக்கையும் வாழ்த்துரையும்
11இப்பொழுது என் கைப்பட நான் உங்களுக்கு எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன் பாருங்கள்!
12உலகின் முன் நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்களே விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையைமுன்னிட்டுக் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
13விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், உங்கள் உடலில் செய்யப்படும் அறுவையை முன்னிட்டுத் தாங்கள் பெருமை பாராட்டிக் கொள்வதற்காகவே நீங்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள்.
14நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
15விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.
16இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!
17இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில், என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
18சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.